ஆர்கே நகர் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நகரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தொகுதிக்கு சென்று, பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. இங்கு ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை, தொடர்ந்து செய்வதற்காகவே நான் இந்த இடை தேர்தலில் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா, மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

என் மீது பல கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களது புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நான், எதிர் கொள்வேன்.

என் மீது சுமத்தப்படும் புகார்கள், குற்றச்சாட்டுகளை முன் வைத்து தேர்தலை நிறுத்தினாலும், எனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும், ஆர்கே நகர் தொகுதியில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.