புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து, அவை தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்:  ராமதாஸ் (தல கூட்டணியில இருக்கிற காரணத்துக்காக இப்படி நீங்க பாதாம் பால் தடவி, பாறாங்கல்லை கடிக்கிறது புரியுது. இதுவே கூட்டணியில இல்லேன்னா ‘உலக முதலீட்டாளர் மாநாட்டுல ஒப்பந்தம் போட்ட மூணு லட்சம் கோடி முதலீட்டில் ஒண்ணு கூட வரலை. யாரை  ஏமாத்துறீங்க?’ன்னு வெடுக்குன்னு கேட்டிருப்பீங்கள்ள)

*கூட்டணிக் கட்சியின் அழுத்தத்திற்கு காங்கிரஸ் ஒரு போதும் கட்டுப்படாது. தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருந்து வருகின்ற நிலை மாறும் விரைவில்: கே.எஸ்.அழகிரி. (உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லீங்கண்ணா. கெடக்கட்டும், நாங்குநேரியில தி.மு.க. கூட்டணி சார்பா போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸுக்கே தரணும்னு ஓப்பன் டூப்பனா கேட்டுட வேண்டிதானே! அதென்ன சுத்தி வளைச்சு சுற்றுலா போற பழக்கம்?) 

*பதின்மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளேன். கேமெரா முன் மீண்டும் நின்ற போது கை, கால்கள் எல்லாம் வெடவெடத்தன. ஏதோ சமாளித்து ஒரு மாதிரி நடித்துவிட்டேன்: விஜயசாந்தி (ஏங்க மேடம், சினிமாவுல நடிக்காத இத்தனை வருஷமா நீங்க அரசியல்ல தானே இருந்தீங்க. அப்புறம் எப்படி நடிப்பு டச் விட்டு போச்சுன்னு சொல்றீங்க? ஆக்சுவலா முன்னாடியை விட ரொம்ப சிறப்பாக, தேசிய விருது வாங்குற அளவுக்கு நடிக்கணுமே?) 

*தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்திட வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் மாலை வரை உணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன். அனைவரும் ஒத்துழையுங்க:   குமரி அனந்தன். (க்கும், மக்கள் ஒத்துழைக்குறது இருக்கட்டும். என்னதான் மக்கள் நலனுக்கானதுன்னாலுமே கூட தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிரான இந்த போராட்டத்துக்கு உங்க மகள் முதல்ல ஒரு ஆதரவு ட்விட் போடுறாங்களான்னு பார்ப்போம்! அரசியல் கலப்பில்லாத இந்த நல்ல போராட்டத்தை ஒரு கவர்னர் ஆதரிப்பதில் எந்த தவறும் வந்துடாது) 

*தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு  சென்றோம். அங்குள்ள தொழில் அதிபர்களை சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தால்தான் சரியாக இருக்கும். அதனால் கோட் - சூட் அணிந்தேன்: எடப்பாடி பழனிசாமி. 

(மாண்புமிகு தமிழக முதல்வர் கடல் தாண்டி, வெஸ்டர்ன் ஆடைகளில் கலக்கிட்டீங்க போங்க. ஆனால் உங்கள ஓயாமல் சீண்டுற தி.மு.க. ‘ஒருவேளை இவரு அந்தமான் பழங்குடிகளின் விவசாயத்தை பார்க்கப்போனா என்ன உடையில் போவார்?’ன்னு ஒரு கேள்வி கேக்குறதை உங்க காதில் போட்டு வைப்பது எங்க கடமைங்ணா)