What was Jayalalitha when buying fingerprint enquiry commission report
இடைத் தேர்தலில் வேட்பு மனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்ததாக சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையின்போது டாக்டர் பாலாஜி தெரிவித்ததாக விசாரணை ஆணையத் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி, சங்கர் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் விடுத்தது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர் பாலாஜியிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் 3 மணி நேரமாக குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என மருத்துவர் பாலாஜியிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் தெரியவந்து உள்ளது என்றார்.
வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது கூறினார்.
விண்ணப்பம் தொடர்பான விபரத்தை ஜெயலலிதா கேட்டு தெரிந்துக்கொண்டார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை, உடல்நிலை பற்றி 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறை செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது எனவும் மருத்துவர் பாலாஜி கூறிஉள்ளார் என ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
இந்நிலையில் விசாரணை ஆணையம், வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக மருத்துவர் பாலாஜி கூறினார் என கூறிஉள்ளது.
ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற பின்னர் விரலில் இருந்த மையை மருத்துவர் பாலாஜி அழிக்க முயன்ற போது, சசிகலா தடுத்து அழித்து உள்ளார். சசிகலா கேட்டதன்பெயரில் ஜெயலலிதாவிடம் கைரேகையை பெற பூங்குன்றனை மருத்துவர் பாபு ஆபிரகாம் அழைத்து உள்ளார் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது
