உள்துறை அமித்ஷாவின் தமிழக வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உள்துறை அமித்ஷாவின் தமிழக வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் வருவதால் பாஜவை பலப்படுத்தவே அக்கட்சி தலைவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள். 

சட்ட ஒழுங்கு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை. திமுக எம்எல்ஏ இதயவர்மன் வீட்டில் ஆயுதப்பண்னையை போலீஸ் கண்டுபிடித்தனர் என ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஓழுங்கை பேணிக்காக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்றார். 

மேலும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் திமுகவைப் பொறுத்தவரையில் எதையும் யோசிக்காமல், விசாரணை இல்லாமல், 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என அவர்களின் ஆட்சிமுறை இருந்தது. இயற்கை நியதி என்ற ஒன்று இருக்கிறது. யாராக இருந்தாலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எந்தப் பதவியில் உள்ளவராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதற்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். அதனடிப்படையில்தான், விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தருகின்ற அறிக்கையின் அடிப்படையில்தான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.