ரஜினியுடனான முரண்பாடு நீங்கிவிட்டதாக நாம் தமிழர் சீமான் கூறியதன் பின்னணியில் ரஜினியிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி அறிவித்த அடுத்த நிமிடமே அதற்கு எதிராக பேட்டி அளித்தவர் சீமான். அப்போது முதல் ரஜினியை அவர் கிண்டல் செய்யாத, விமர்சிக்காத, வசை பாடாத மேடைகளே இல்லை எனலாம். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட ரஜினியை சீண்டி ஏதாவது கருத்து கூறுவது சீமான் வழக்கம். இதற்கு காரணம் கன்னடரான ரஜினி தமிழகத்தை ஆள நினைப்பதா? என்பது மட்டுமே என்றும் சீமான் விளக்கம் அளித்து வந்தார். சீமான் மட்டும் அல்லாமல் அவரது கட்சியினர் அனைவருமே ரஜினிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தனர்.

இதே போல் ரஜினி ரசிகர்களும் கூட சீமானை விடாமல் சீண்டி வந்தனர். இதனால் சமூக வலைதளங்கள் மட்டும் அல்லாமல் ஆங்காங்கே ரஜினி ரசிகர்கள், சீமான் ஆதரவாளர்கள் இடை மோதல் வெடித்தது. ரஜினி ரசிகர்களை சீமான் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவங்கள்கூட அரங்கேறின. இப்படி ரஜினி ரசிகர்கள் – சீமான் ஆதரவாளர்கள் இடையே மோதல் உச்சத்தில்  இருந்த நிலையில் திடீரென ரஜினியுடனான தங்களின் முரண்பாடு நீங்கிவிட்டதாக சீமான் கடந்த வாரம் பேட்டி அளித்தார்.

எலியும் பூனையுமாக இருந்த நிலையில் திடீரென ரஜினிக்கு கரிசனமாக சில விஷயங்களையும் கூறினார் சீமான். ரஜினி அமைதி, நிம்மதியை எதிர்பார்ப்பவர், அவர் அரசியலுக்கு வந்தால் எங்களை போன்று பல்வேறு அவமானங்களை அவர் சந்திக்க நேரிடும். ரஜினியின் மனதுக்கு அவரால் இந்த துரோகங்களை எல்லாம் எதிர்கொள்ள முடியாது. எனவே ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது தான் நல்லது என்று அறிவுரை வழங்கினார். சீமானின் வார்த்தைகளில் விமர்சனமோ, கிண்டலோ இல்லை, மாறாக ரஜினி மீதான அக்கறையே இருந்தது.

திடீரென ரஜினி மீது அக்கறைப்பட என்ன காரணம் என விசாரித்த போது கிடைத்த தகவல், சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி பேசியது தான் என்கிறார்கள். கடந்த வாரம் சீமான் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு வடபழனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ஒரு சில நாள் சிகிச்சைக்கு பிறகு சீமான் வீடு திரும்பினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீமான் உடல் நிலை குறித்து விசாரித்ததாக சொல்கிறார்கள்.

மேலும் சீமான் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று வாஞ்சையாக ரஜினி அறிவுரை வழங்கியதாகவும், அதோடு மட்டும் அல்லாமல் அரசியல் நிலவரம் குறித்தும், சீமான் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் ரஜினி சீமானிடம் விவாதித்தாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து தான் ரஜினி மீதான தன் வன்மத்தை சீமான் உடனடியாக கைவிட்டதாக கூறுகிறார்கள். வன்மத்துடன் இருப்பவர்களையும் ஒரே ஒரு செல்போன் அழைப்பில் தன் நண்பர்களாக்கும் கலை ரஜினிக்கு கைவந்தது போல.