முதல்வராக பதவி ஏற்க முடியாது
சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வானி குமார் கூறுகையில், “ சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, இதுதான் இறுதியான தீர்ப்பாகும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே, அந்த கட்சியின் சார்பில் முதல்வர் பதவி ஏற்க முடியும்'' எனத் தெரிவித்தார்.
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய பி.வி ஆச்சார்யா கூறுகையில், “ 19 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று சொல்ல முடியும். நமது நாட்டின் நீதித்துறை சுதந்திரமானது, வலிமையானது, அதிகாரமிக்கது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
குற்றவாளி பணம், அதிகாரத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை காட்டுகிறது. சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தண்டனை காலம் முடிந்து, அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது, ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது'' என்றார்.
10 ஆண்டுகளுக்கு அரசியல் கிடையாது
அரசமைப்புச் சட்ட வல்லுநர் பி.பி.ராவ் கூறுகையில், “ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால், இந்த 4 ஆண்டுகள், அதன்பின் வரும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் அரசியலில் நேரடியாக செயல்பட முடியாது. தேர்தலில் போட்டியிட முடியாது.
ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகளுக்கு முதல்வர் கனவை அவர் நினைக்கவே முடியாது. ஆனால், சிறைதண்டனை காலம் முடிந்து, அரசியலில் மறைமுகமாக மட்டுமே செயல்படமுடியும்'' எனத் தெரிவித்தார்.
