- Home
- Politics
- நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
இப்போது கை நழுவிப் போனால் அடுத்து சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். ஆகையால் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறி பிரிந்தவர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள்

மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனை சமீபத்தில் முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி இருவரும் டெல்லியில் சந்தித்து பேசினர். திமுக முக்கியமான அமைச்சர்கள் குறித்து சில முக்கிய பைல்ஸை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது ஆக்சன் எடுத்தால்தான் அது தேர்தல் நேரத்தில் நமக்கு உதவியாக இருக்கும் எனக்க்கூறி இருக்கிறார்கள். என்.டி.ஏ கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விரைவில் மத்திய அமைச்சரான, தமிழ்நாட்டுக்கான தேர்தல் பொறுப்பாளராக பாஜகவால் நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயில் வரவிருக்கிறார். அதன் பிறகு தொகுதி பங்கீடு சம்பந்தமாக சில விஷயங்கள் பேசலாம் என்று கூறி அனுப்பி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றதன் பின்னனியில் வேறொரு ரகசியமும் இருக்கிறது என்கிறார்கள். எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர் முறைகேடு வழக்கு இருக்கிறது.
அது தொடர்புடைய இரண்டு முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது குறித்து அதற்கு அனுமதி கொடுப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சமீபத்தில் அதிருப்திய வெளிப்படுத்தி இருந்தார். இது தொடர்புடைய சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஒருவேளை மத்திய அரசு அனுமதி கொடுத்தால் அது அடுத்த கட்டமாக எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு குடைச்சலாக மாறலாம். இவை எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் டெல்லியில் சில முக்கியமான புள்ளிகளை அவர் சந்தித்து பேசி இருக்கிறார் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அத்தோடு, ரகசியமாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனையும் தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. அப்போது, சி.பி.ஆரிடம், ‘‘அதிமுக பிளவு பட்டுக் கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமியிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்பதாக இல்லை. விஜயும் மூன்றாவது சக்தியாக வளர்ந்து வருகிறார். அவர் கூட்டணிக்கு வருவார் என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். நமது கூட்டணிக்கு விஜய் வர சாத்தியமில்லை. அதிமுகவில் இருந்து சிலர் தவெகவுக்கு தாவ முயற்சி எடுத்து வருகின்றனர்.
அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்களை ஓரணியில் இணைக்க வேண்டும். நமது சமூகத்தை சேர்ந்தவர் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக இதுதான் சரியான சந்தர்ப்பம். இப்போது கை நழுவிப் போனால் அடுத்து சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். ஆகையால் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறி பிரிந்தவர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள் ‘’ எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் எஸ்.பி.வேலுமணி. எஸ்.பி.வேலுமணி இப்படி முறையிடக் காரணம் சி.பி.ஆர் கோவை மண்டலத்தைச் சேர்ந்தவர். கவுண்டர் சமூகத்தினரும் கூட.
