தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கும் இடையிலான உரசலும், மோதலும் ஊரறிந்த சுவாரஸ்யங்கள். இரு தலைவர்களை சுற்றி நிற்கும் நிர்வாகிகளும் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் கூட்டத்தின்  தலைவர்களை போட்டு விளாசி எடுத்து பதிவிடுவதும், அது எல்லை மீறிப் போகும் வரை பார்த்து பரவசமடைந்துவிட்டு பிறகு ஒரு கட்டத்தில் ‘அமைதி! அமைதி!’ என்று வெண்கொடி வேந்தனாக அவதாரமெடுப்பதும் இரு தலைவர்களுக்கும் வழக்கம். 


 
இந்நிலையில், இந்த பஞ்சாயத்துக்களின் உச்சமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது மாஜி அமைச்சர் துரைமுருகன், ‘விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இரண்டும் எங்கள் தோழர்கள்தானே தவிர கூட்டணியில் இல்லை.’ என்று ஒரு போடு போட, அதிர்ந்த இரு கட்சிகளின் தலைவர்களும் அறிவாலயம் நோக்கி ஓடிச்சென்று ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி சமாதானம் செய்து வைத்தனர். இந்த பிரச்னைன் ஓரளவு ஓய்ந்து, இரு கட்சிகளின் தலைவர்களும் புன்முகம் பூத்துக் கொண்டிருக்கும் நிலையில், இதோ அடுத்த பஞ்சாயத்தை துவக்கியிருக்கிறார் திருமாவளவன்...

அதாவது,  திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து வாய் திறந்த தொல்.திருமாவளவன் “கஜா  புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் இன்னும் நடைபெறாமல் உள்ள நிலையில் தற்போது தேர்தலை தள்ளி வைப்பது நல்லது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல்  இப்போது வேண்டாம்! என்றுதான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேர்தலை கண்டு பயப்படும் கட்சிகள் தி.மு.க, அ.தி.மு.க. கிடையாது.” என்று ஒரு பேட்டியை தட்டினார். 


இதில்தான் டென்ஷனாகிவிட்டனர் தி.மு.க. தலைவர்கள் “திருவாரூர் தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செஞ்சுடுச்சு இப்போ! ஓ.கே.தான். ஆனால் என்னதான் எல்லா கட்சிகளுமே தேர்தல் வேண்டாமுன்னு சொன்னாலும் கூட, அந்த தேர்தலை பார்த்து பயந்து நடுங்குனது அ.தி.மு.க.தான். பிரச்சாரம் செய்ய திருவாரூர் வீதிகளில் இறங்கினால் மக்கள் விரட்டி விரட்ட் அடிப்பாங்க அப்படிங்கிற பயம் ரொம்பவே அந்த கட்சிக்கு இருந்துச்சு. ஆக, தேர்தல் வேண்டாம்! என்பதையும் மீறி, நடந்தால் அ.தி.மு.க.வின் படு தோல்வியை ரசிக்கலாம்! அப்படிங்கிற மனநிலையில்தான் நாம இருந்தோம். 

ஆனால் இந்த திருமா என்னான்னா வழிய வழிய போயி தேர்தலை நிறுத்துறதுக்கு துடிச்சிருக்கிறார். அது மட்டுமில்லாமல், ‘தேர்தலை கண்டு பயப்படாத இயக்கம் தி.மு.க., அ.தி.மு.க.’ன்னு அந்த கட்சிக்கும் சேர்த்து வக்காலத்து வாங்கியிருக்கார். அப்படின்னா என்ன, எடப்பாடியாரை குளிர வைக்க ட்ரை பண்றாரா? கூட்டணியில இருந்து விலக நினைக்கிறாரா? ஆளும் அணியில அவருக்கு அதிக சீட் தர்றோமுன்னு ஏதாவது ஆஃபர் ஆசை காட்டி மடக்கிட்டாங்களா? உங்களுக்கு இணையா எடப்பாடி தரப்பையும் ‘பயப்படாதாவங்க’ன்னு பில்ட் அப் கொடுத்து ஏத்துறாரே! இதையெல்லாம் நீங்க கவனிக்கணும் தளபதி. 
ஏற்கனவே கடந்த தேர்தல்ல மக்கள் நல கூட்டணி!ன்னு ஒண்ணை வெச்சுக்கிட்டு நம்மை ஆட்சிக்கு வர விடாமல் பண்ணுனவங்களில் முக்கியமான நபர் இவர்! திருமாவிடம் ரொம்ப ஜாக்கிரதையா அரசியல் பண்ணுங்க.” என்று போட்டுக் கொடுத்திருக்கின்றனராம் தி.மு.க. தலைகள். 
இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கப்போகிறது? என்பதை கவனிப்போம்!...