what ramadoss told after met karunanidhi in gopalapuram
ஒரு டாக்டர் ஒரு பேஷண்டை சந்திப்பதில் எந்த அதிர்ச்சியுமில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ், பேஷண்டான கருணாநிதியை சந்திப்பது ஆச்சரியம்தான், அரசியல்தான்!
தமிழக அரசியல் கிட்டத்தட்ட ஓராண்டாக ஒரு விநோதமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா எனும் பேராளுமை மறைந்தேவிட்டார். கருணாநிதி எனும் அதிபேராளுமை இயங்க இயலாதவராய் இருக்கிறார். விஜயகாந்தின் உடல்நிலை அவரை சற்றே அசெளகரியப்படுத்த, தொடர் தேர்தல் தோல்விகளோ அவரை அதிர வைத்திருக்கிறது.
வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ தலைவர்கள், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்கமான புத்துணர்வுடன் இருந்தாலும் கூட ஜெ., கருணாநிதி எனும் இரு மெயின் ஆர்டிஸ்டுகளும் சீனில் இல்லாத நிலையில் இவர்களின் பர்ஃபார்மென்ஸ் என்னவோ மக்கள் மன்றத்தில் எடுபடாமலே இருக்கிறது.
கருணாநிதியின் புதல்வரான ஸ்டாலின் தி.மு.க.வை வைபரேட் மோடிலேயே வைத்திருந்து தந்தையின் இடத்தை முடிந்த மட்டிலும் நிரப்புகிறார். ஆனால் ராமதாஸின் மகன் அன்புமணியின் குரலோ வட தமிழகத்தை தாண்டி எடுபடுவதேயில்லை வழக்கம்போல்.
இந்நிலையில் கமல், ரஜினி, விஜய் என்று அரிதார அவதாரங்கள் வேறு அரசியல் அடவு கட்டிட துடிக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் விநோதமான அரசியல் சூழலைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

இந்நிலையில் ‘கருணாநிதி ஆக்டீவாக இருந்திருப்பால் தமிழக அரசியல் வேற லெவலில் இருந்திருக்கும்!’ என்று அ.தி.மு.க. புள்ளிகளே விசனப்படுமளவுக்கு பேச்சுகள் எழுந்தன.
எதிரியே வேண்டியதாலோ என்னவோ கடந்த சில வாரங்களாக அநியாயத்துக்கு ஆக்டீவாகியிருக்கிறார் கருணாநிதி. கோபாலபுரத்து முதல் மாடியிலுள்ள அவரது அறை கடந்த சில மாதங்களாக களையிழந்து கிடந்தது. இதோ இப்போது அங்கே மீண்டும் அரசியல் வெளிச்சம். அரசியல் மட்டுமா? விலகிச் சென்ற குடும்ப அங்கத்தினர்கள் ஓடி வந்து அளவளாவுகின்றனர். கொள்ளுப் பேரனின் திருமணத்தையே நடத்தி வைக்குமளவுக்கு கெத்தாகிவிட்டார் கருணாநிதி.
கல்யாண கலகலப்புகள் கோபாலபுர இல்லத்தை விட்டு நீங்காத நிலையில் இன்று இரவில் அரசியல் பரபரப்பின் புள்ளியாகி இருக்கிறது கோபாலபுர இல்லம். அது டாக்டர் ராமதாஸின் வருகையால்!
இன்றிரவு டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் ஏ.கே.மூர்த்தி சகிதமாக கோபாலபுர இல்லம் வந்தார். அவரை வாசல் வரை சென்று வரவேற்ற ஸ்டாலின், இல்லத்தினுள் அழைத்துச் சென்றார்.

கடந்த கணிசமான ஆண்டுகளில் நண்பனாகவும், எதிரியாகவும் அரசியல் களத்தில் களமாடிய ராமதாஸை தன் வழக்கமான அறையில் எதிர்கொண்டு அமர்ந்திருந்தார் கருணாநிதி. கருணாநிதியின் கரங்களை பற்றிய டாக்டர், பின் அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிற சால்வையை வழங்கினார். பின் அவர்களை அமரச்சொன்னார் ஸ்டாலின்.
பிறகு அப்பாவின் காதருகில் சென்று ஸ்டாலின் ராமதாஸ் வந்திருப்பது பற்றிய செய்திகளை கூற, அதை சின்ன புன்முருவலுடன் கேட்டுக் கொண்டார் அவர். இந்த நிகழ்வை சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் கவனித்தார் ராமதாஸ். காரணம், கூட்டணி மேடைகளில் சிங்கம் போல் கருணாநிதியை பார்த்து மகிழ்ந்தவர் டாக்டர். ஆனால் கருணாநிதியின் தற்போதைய நிலை டாக்டரை மனம் சஞ்சலப்பட வைத்திருக்கலாம்.
பின் ஸ்டாலினிடம் அப்பாவுக்கு வழங்கப்படும் ட்ரீட்மெண்டுகளை பற்றி கேட்டறிந்த டாக்டர், சில மருத்துவ ஆலோசனைகளையும் தந்தார். ‘அப்பா உடம்புல மிகப்பெரிய முன்னேற்றம் தெரியுது. ஆச்சரியப்படுத்துறார். இது மாத்திரை, மருந்தால மட்டும் சாத்தியப்படலை. குடும்பத்தினரோட அன்பும், பிரார்த்தைனையும்தான் அவரை இப்படி மறுபடியும் எழுந்து உட்கார வெச்சிருக்குது.

உண்மையான இந்த அன்பும், கவனிப்பும் எல்லா பேஷண்டுகளுக்கும் கிடைச்சிருந்தா, பல பேர் இன்னைக்கு நம்ம கூட வாழ்ந்திருப்பாங்க. உண்மையான உறவுகள் அவங்களுக்கு கிடைக்கலை.’ என்று ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த வார்த்தைகளை ஸ்டாலினை நோக்கி உதிர்த்திருக்கிறார் ராமதாஸ். இதை அழுத்தமான தலையசைப்புடன் ஆமோதித்திருக்கிறார் ஸ்டாலின்.
பிறகு வழக்கமான சம்பிரதாயங்களுக்கு பின் கருணாநிதியிடம் கைகூப்பி வணங்கியபடி கிளம்ப ஆயத்தமாகியிருக்கிறார் டாக்டர். அப்போது கருணாநிதி ஏதோ சொல்ல எத்தனித்தவராய் இருக்க, டாக்டரும் குனிந்து அவரருகே சென்றிருக்கிறார். பின் கருணாநிதியால் எதையும் சொல்ல முடியாததால், டாக்டரே அன்பும் அக்கறையும் கலந்து சில வார்த்தைகளை சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கிறார்.
கருணாநிதியை ராமதாஸ் சந்தித்தது ‘உடல் நலம் குன்றிய சக தலைவரை மற்றொரு தலைவர் சந்தித்த சம்பிரதாய செயலே!’ என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே வைகோ, திருமா, கம்யூனிஸ தலைவர்கள், ஹெச்.ராஜா போன்றோரெல்லாம் கருணாநிதியை சந்தித்துவிட்டார்கள்.
டாக்டர் ராமதாஸ் சந்தித்திருப்பது சற்று லேட்தான். ஆனாலும் மற்ற தலைவர்கள் சந்தித்தபோது இருந்ததை விட இப்போது கருணாநிதி நன்கு உடல் நிலை தேறியிருக்கிறார் என்பது ஹைலைட்.
பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வின் ஆளும் அணிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று அரசியல் செய்யும் நிலையில் தமிழக எதிர்கட்சிகளெல்லாம் தி.மு.க.வின் பக்கம் இயல்பாக நகர துவங்கிவிட்டன. ஆனால் தே.மு.தி.க.வும், பா.ம.க.வும்தான் நெருங்காமலிருந்தன. ‘இனி ஜென்மத்துக்கும் கூட்டணியே இல்லை’ என விஜயகாந்த் அறிவித்துவிட்டதன் மூலம் கருணாநிதியை சந்திக்க கேப்டன் வந்தாலும் கூட அதில் அரசியல் முக்கியத்துவம் இருக்காது.
ஆனால் ராமதாஸ் வந்திருப்பதை அப்படி கடந்து சென்றுவிட முடியாது. அவரது வருகையில் அக்கறையுடன், அரசியலும் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் அவரை நெடுங்காலமாக அறிந்தவர்கள். இந்த விசிட் கூடிய விரைவில் தி.மு.க. - பா.ம.க. இடையில் ஒரு அரசியல் இணைப்பை நிச்சயம் உருவாக்கும் என்கிறார்கள்.
ஆனால் வேறு சிலரோ ‘முதல்வர் கனவிலிருக்கும் அன்புமணி நிச்சயமாக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு சம்மதம் சொல்லவே மாட்டார். ஏனெனில் அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் மட்டுமே இருக்க முடியும் என்பது அன்புவுக்கு தெரியும்.’ என்கிறார்கள்.
டாக்டரின் சர்ப்பரைஸ் விசிட் ட்ரீட்மெண்ட் என்ன மாதிரி அரசியல் விளைவுகளை உருவாக்குகிறது என போகப்போக பார்க்கலாம்.
