what rajini fans expected from his side

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 6வது நாளாக தனது ரசிகர்களை சந்தித்துவருகிறார். இந்த ரசிகர் சந்திப்பின் கடைசி நாள் இது. இன்றைய தினத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை அவசியம் அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார் ரஜினி காந்த். அதன்படி இன்று காலை 8.30க்கு அதற்கான எதிர்பார்ப்புகளுடன் ரஜினி ரசிகர்கள் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். மண்டபத்துக்கு வெளியிலும் அதிக அளவில் ரசிகர்கள் பட்டாசு வெடிகள் இனிப்பு சகிதம் கூடிவிட்டனர். ரஜினி அறிவிக்கப் போகும் அந்த முடிவுக்காகக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

நாம் ரஜினி ரசிகர்களிடம் பேசினோம். ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? பல காலமாக ரஜினி இப்படித்தானே சொல்லி வருகிறார் என்று கேட்டபோது, அவர் அரசியலுக்கு வருவதற்கான காலம் இதுதான். இதை விட்டால் வேறு சிறந்த வாய்ப்பு அமையாது. அவர் எடுக்கப் போகும் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவர் எது செய்தாலும் நாட்டுக்கு நல்லதாகவே முடிவு செய்வார்.

குறிப்பாக, தமிழகத்தில் காமராஜர் காலத்துக்குப் பின்னர் பெரிய அளவில் அணைகள் கட்டப்படவில்லை. ரஜினி காந்த்க்கு தமிழகத்துக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனவே அவர், அணை கட்டுவதையும் நதி நீர் இணைப்பையும் அவர் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும். இதை அவர் வெகு காலமாகவே சொல்லி வருகிறார். எனவே அவர் ஆன்மிகம் கலந்த அரசியலோடு, நாட்டுப் பற்றுடன் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர். 

குறிப்பாக, ரஜினியால் நதி நீர் இணைப்பை முன்னிலைப் படுத்தி, தமிழகத்தில் விவசாயத்தை செழிக்கச் செய்ய முடியும் என்று பெருத்த எதிர்பார்ப்பை நாட்டுப் பற்றுடன் வெளிப்படுத்தினர். 

பார்ப்போம்... ரஜினி அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா? இன்னும் சில நிமிடங்களில் ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், உண்மையான தலைவன் தேவை, நாட்டுப் பற்றுடன் கூடிய தலைவன் தேவை... அது ரஜினி தான் என்று ரசிகர்கள் தங்கள் கோஷங்களை முன்வைத்து காத்திருக்கின்றனர்.