திமுகவுடன் கூட்டணி குறித்து பேச பொன்.ராதாகிருஷ்ணன் என்ன அக்கட்சியின் தலைவரா? என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி படத்திறப்பு விழாவிற்கு வந்த அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்..., "சமீபத்தில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்.? என பல சண்டைகள் சச்சரவுகள் நடைபெற்றன, அந்த பிரச்சனை தற்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக ஒரு மூழ்கும் கப்பல். உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்படி தான் தேர்தெடுக்கப்படுகின்றனர். அவர்களை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குறியது.

இது போன்ற சம்பவங்கள் 15-க்கும் மேல் தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் ஒரு தீண்டாமை வழக்கு கூட பதியவில்லை. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தகுக் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடும், தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும், பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர் தற்போது என்ன பொறுப்பில் உள்ளார்? திமுகவுடன் கூட்டணி குறித்து பேச அவர் என்ன அக்கட்சியின் தலைவரா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.