What justice says is that the opposition seat is allocated to the assembly but not with the DMK

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி சீட் தான் தனக்கு ஒதுக்கி இருப்பதாகவும் ஆனால் உடன் அமர்ந்திருக்கும் திமுகவுடன் பேசக்கூடாது என சொல்வது என்ன நியாயம் எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது. 

இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார். 

அந்த வகையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி 18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மெஜாரிட்டி அரசாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளிக்க முற்பட்ட டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து திமுகவை சேர்ந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு தெரிவித்தார். 

ஆனாலும் வாய்ப்பு தர சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினருடன் கூட்டு வைத்திருப்பதாக புகார் கூறியதற்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். 

மேலும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி சீட் தான் தனக்கு ஒதுக்கி இருப்பதாகவும் ஆனால் உடன் அமர்ந்திருக்கும் திமுகவுடன் பேசக்கூடாது என சொல்வது என்ன நியாயம் எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். 

திமுகவுக்காவது காங்கிரஸ் சப்போர்ட் இருந்தது எனவும் இந்த அரசுக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை எனவும் தெரிவித்தார்.