போடி தொகுதிக்காக இதுவரை எதையும் அவர் செய்யவில்லை. அதுகுறித்து எந்த சிந்தனையுமே அவருக்கு இல்லை. ஓர் ஆண்டில் உள்ள 365 நாட்களுமே சென்னையில்தான் ஓபிஎஸ் இருக்கிறார். 

ஓபிஎஸ்ஸால் போடிநாயக்கனூர் தொகுதிக்கு எந்தப் பலனுமே இல்லை என்று தேனி மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் ஓபிஎஸ்ஸிடம் தங்கத் தமிழ்ச்செல்வன் தோல்வியடைந்தார். 2001, 2011, 2016 என மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். குறிப்பாக 2002-ஆம் ஆண்டில் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக ஆண்டிப்பட்டி தொகுதியை தங்கத்தமிழ்ச் செல்வன் விட்டுக்கொடுத்தார். அதற்காக ராஜ்ய சபா எம்.பி. பதவியை தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு ஜெயலலிதா வழங்கினார். 

அதிமுகவில் இருந்தபோதே தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். இருவருக்கும் ஒத்து வராது. அதன் ஒரு பகுதியாகவே 2017-இல் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது சசிகலா பக்கம் சாய்ந்தவர். அவருக்காகவும் டிடிவி தினகரனுக்காகவும் பணி செய்து, கடைசியில் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். பின்னர் திமுகவில் சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ்ஸிடம் தோல்வியடைந்தபோதும் திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேனியில் முழுமையாக வெற்றி பெற வியூகங்களை வகுத்து வருகிறார் தங்கம். 

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேனியில் சிலமரத்துப்பட்டியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன், "போடி எம்எல்ஏவாக இருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், போடி தொகுதிக்காக இதுவரை எதையும் அவர் செய்யவில்லை. அதுகுறித்து எந்த சிந்தனையுமே அவருக்கு இல்லை. ஓர் ஆண்டில் உள்ள 365 நாட்களுமே சென்னையில்தான் ஓபிஎஸ் இருக்கிறார். தேர்தல் வந்தால்தான் இந்தத் தொகுதிக்கு வருகிறார். போடி தொகுதியில் பல்வேறு இடங்களில் சாலை, கழிப்பறை, வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதில் பெரும் குறைபாடு உள்ளது. முதல்வர், துணை முதல்வர் என இந்தத் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாகவும் இருக்கிறார். அப்படி இருந்தபோதும் போடி தொகுதிக்கு அவரால் எந்த பலனுமே இல்லை. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள்கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி செய்து வருகிறார்” என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.