காவிரிக்காக அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும் நியூட்ரினோ திட்டத்தை மக்கள் நலன் கருதி கைவிட வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இரண்டு பெரும் பிரச்சனைகள் தலை தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது. அதாவது காவிரி நீருக்காக மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்திய அரசு காலதாமதப்படுத்தி கொண்டே வருகிறது. 

நேற்றுடன் கால அவகாசம் முடிந்தும் இதுவரை எத்தகைய வாரியமும் மத்திய அரசு அமைக்க வில்லை. அதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததோடு, வரும் 3 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தையும் அதிமுக அரசு அறிவித்துள்ளது. 

இதேபோல் நியூட்ரினோ ஆலை பிரச்சனையும் தமிழகத்தில் தலைதூக்கி உள்ளது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவிரிக்காக அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும் நியூட்ரினோ திட்டத்தை மக்கள் நலன் கருதி கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.