மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து, மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப்பேருந்து, ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த இனோவா காரின் ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து வந்துள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனரால் வழிவிட முடியவில்லை. 

இதனால், ஆத்திரமடைந்த இனோவா கார் ஓட்டுநர், அரசுப்பேருந்தை முந்திச்சென்று மறித்து நிறுத்தியிருக்கிறார். இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய கார் ஓட்டுநர், பேருந்தின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். பின்பு ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி பேருந்து ஓட்டுநரை கல்லாலும், இரும்பு கம்பியாலும் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதில் பேருந்து ஓட்டுனர் முத்துகிருஷ்ணனின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது என எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து, மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. 

Scroll to load tweet…

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது. இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.