கே.என். நேருவுடன் அமைச்சர் எ.வ.வேலும் இச்சந்திப்பில் பங்கேற்றார். இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்பட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் கே.என். நேரு. எ.வ.வேலு ஆகியோர் ஈடுபட்டனர்.
மேயர், சேர்மன்களைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெற இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், பதவிகளை பங்கீட்டு கொள்வது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றன.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளை முழுமையாக வென்ற திமுக கூட்டணி, நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் தாங்கள் எதிர்பார்க்கும் பதவிகள் குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் பட்டியலை அளித்துள்ளன. ஒவ்வொரு கட்சியும் எதிர்ப்பார்ப்புகளோடு இருக்கும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையை திமுக அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் கூட்டணி கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

கே.என். நேருவுடன் அமைச்சர் எ.வ.வேலும் இச்சந்திப்பில் பங்கேற்றார். இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்பட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் கே.என். நேரு. எ.வ.வேலு ஆகியோர் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய பதவிகள் குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர். விசிக சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்த கோரிக்கை அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்திருக்கிறோம். நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளோம். என்னென்ன இடங்கள் என்பது குறித்து முதல்வர் தலைமையில் அறிவிப்புகள் வெளியாகும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கூட்டணியில் எங்களுக்கு கொடுத்த நகர்ப்புற உள்ளாட்சி இடங்களில் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். முதல் கட்டமாக எங்களுக்கு இரண்டு பதவிகள் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வரிடம் ஆலோசனை செய்த பின் எந்தப் பதவி என கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். கடலூர் துணை மேயர், இரண்டு நகராட்சி பதவிகளை முதல்வரிடம் கேட்டுள்ளேன். ஒருவேளை கேட்ட இடங்கள் கிடைக்காவிட்டாலும் வருத்தம் அடைய மாட்டோம். வெற்றி பெற்ற பல்வேறு இடங்களின் பட்டியலையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறேன், கண்டிப்பாக அவர் எங்களுக்கு பதவிகளை வழங்குவார் என நம்புகிறேன்” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தப் பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்கள் தொடர்பாக இன்று முடிவாகும் என்றும் அந்த இடங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
