what is the policy for MNM kamal party

தற்போது இழிவான நிலையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை மாற்றுவது மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு நடிகர் கமலஹாசன் பொது வெளியில் அரசியல் குறித்து பேசத் தொடங்கினார். அதிமுக ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது பேசியும், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டும் வந்தார்.

இதனால் தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனை மிகக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். அப்போதிருந்தே கமல் முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து கடந்த மாதம் 21 ஆம் தேதி நடிகர் கமலஹாசன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து மதுரை ஒத்தக்கடையில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

இதையடுத்து அரசியல் கூட்டங்கள், மாணவர்களிடையே உரையாடல் என பல தரப்பு மக்களையும் கமல் சந்தித்துப் பேசி வருகிறார். மேலும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் கமல் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அடுத்த 180 நாட்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் குறித்து புத்தகம் வெளியிடப்போவதாக கமல் அறிவித்துள்ளார்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் , விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும் கூட நிலைக்க வாய்ப்பில்லை என கடுமையாக தெரிவித்துள்ளார். 

இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்றும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.