நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா ஒரு உண்மை புரியும். அது சமீப சில காலமாக, அதாவது இரண்டாவது முறை ஆட்சியை பிடித்த பின் பாரதிய ஜனதா கட்சியானது மகாத்மா காந்தியை தூக்கி வைத்துக் கொண்டாட துவங்கியுள்ளது. இது காங்கிரஸை மிகவும் எரிச்சலும், கோபமும் ஊட்ட நேஷனல் லெவலில் இரு கட்சிகளுக்கும் இடையில் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. 

சுதந்திரம் கிடைச்ச உடனே இருந்தே காந்தியை தான் தங்கள் கட்சியின் அடையாளம் போல் காங்கிரஸ் உருவகப்படுத்தி வந்தது. மக்களோட நினைப்பும் அப்படித்தான் இருந்துச்சு. அதற்கு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி என்று காங்கிரஸின் குடும்ப பெயர்களும் அமைக்கப்பட்டு இருந்ததும் ஒரு காரணம். ஆனால் ‘நேர்மையின் அடையாளமான காந்தியை எப்படி இந்த ஊழல் காங்கிரஸ் வைத்துக் கொள்ளலாம்?’ என்று கருவிய மோடி, தனது கடந்த ஆட்சியில் ‘தூய்மை பாரதம்’ எனும் மெகா திட்டத்தின் அடையாளமாக காந்தியை வைத்தார். இதுவே காங்கிரஸுக்கு எரிச்சலை தந்தது. 

இப்போது இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்துவிட்ட நிலையில், முழுக்க முழுக்க  காந்தியை தங்கள் சின்னமாக்கிட முயன்று வருகிறது பாரதிய ஜனதா. காந்தியின் 150வது பிறந்தநாளை இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடிட திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. மேலும் காந்தியின் திட்டங்களை, கனவுகளை, கொள்கைகளை எப்படி தங்கள் கட்சி, அரசு நனவாக்குகிறது என்பதை தேச மக்களுக்கு விளக்கும் வகையில் பாதயாத்திரை, ரத யாத்திரை, இயற்கை விவசாயம் கருத்தரங்கம், கதர் மற்றும் காதி பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல் என்று ஏகப்பட்ட டெக்னிக்குகளை கையில் வைத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இவற்றை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட இருக்கிறது பா.ஜ. அரசு. 

இது பற்றி பேசும் பாரதிய ஜனதாவின் மாநில அமைப்புச் செயலாளர் ராகவன் “காந்தி யாருக்கும் சொந்தம் கிடையாது. இந்திரா, சோனியா, ராகுலெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் காந்தியை சேர்த்துக் கொண்டதால் நல்லவர்களாகிவிட்டார்களா? அப்படி செய்தால் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்பது முட்டாள்தனம் அது எடுபடாது. காந்தியின் கனவுகளை நிறைவேற்றிட ஒரு கை சுத்தமான, மன சுத்தமான தலைவர் வேண்டும். அது நம் மோடியின்றி வேறு யார்?” என்கிறார். 

ஆனால் காங்கிரஸ் தரப்போ “காந்தியையும் எங்களையும் எவராலும் பிரிக்க முடியாது. காந்தியின் கொள்கைகளை வைத்துத்தான் எங்கள் கட்சியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போதாவது காந்தியின் அருமை பெருமைகளை பா.ஜ.கட்சி உணர்ந்ததும், அவர்களுக்கு ஞானோதயம் வந்ததும் மகிழ்ச்சி. நாதுராம் கோட்சேவை உயர்த்திப் பிடித்தவர்கள் இனியாவது திருந்தட்டும். காந்தியை எங்களிடமிருந்து பிரிக்க ஒரு போதும் அனுமதியோம், இந்த போராட்டத்தில் எங்கள் உயிர் போனாலும் கவலையில்லை.” என்று பதிலுக்கு தாக்குகிறார்கள். 

என்னாபா இது, அஹிம்சையை கத்துக் கொடுத்த காந்தி யாருக்கு சொந்தமுன்னு சொல்லி இப்படி சண்டை போட்டுக்கிறாங்களே!