முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவதாகவும் அந்த குழுவின் உறுப்பினர்கள் என கூறி  11 பேரின் பெயர்களை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக துவங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை அந்த கட்சி தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுத்தது இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் எம்ஜிஆர், மற்றொருவர் ஜெயலலிதா. அதிமுகவை பொறுத்தவரை இவர்கள் இருவரும் வைத்தது தான் சட்டம். நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, கூட்டணி அமைப்பது என அத்தனையும் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த வரை அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். ஆனால் அதிமுகவில் ஆட்சி மன்ற குழு என ஒன்று உண்டு. தேர்தலுக்கு முன்னதாக இந்த குழு அதிமுக தலைமையகத்தில் கூடும்.

அதாவது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது இந்த குழுவின் பணி. எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ தேர்வு செய்யும் வேட்பாளர்களை அப்படியே இந்த குழு ஏற்றுக் கொள்ளும். இந்த குழுவில் இருந்த ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், வளர்மதி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கு இந்த குழு தான் ஒப்புதல்அளித்தது.

அந்த வகையில் குழு அமைத்து செயல்படுவது என்பது அதிமுகவிற்கு புதிது அல்ல. ஆனால் இதுவரை எந்த குழுவாக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் வரை அவர்கள் சொன்னதை தான் கேட்டு வந்தது. இந்த நிலையில் தான்அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஓபிஎஸ் 2017ல் அக்கட்சியில் மீண்டும் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ் ஆகிய ஆறு பேர் எடப்பாடி ஆதரவாளர்களாக இடம்பெற்றுள்ளனர். இதே போல் ஜேசிடி பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், சங்கராபுரம் மோகன், மதுரை கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்களாகியுள்ளனர். இந்த 11 பேர் கொண்ட குழு தான் இனி அதிமுகவை வழிநடத்தும். சரி இந்த குழுவின் பணிகள் என்ன? இந்த கேள்வி ஓபிஎஸ்சிடம் கேட்கப்பட்டது.

அதற்கு கட்சியின் சட்ட விதிகளில் அது தொடர்பாக கூறுப்படும் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். எனவே அதிமுக வழிகாட்டுதல் குழுவின் பணிகள் என்ன என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அதிமுகவில் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கும நிலையில் வழிகாட்டுதல் குழுவின் பணி என்ன என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கே பல்வேறு கேள்விகளை எழுப்பின. இது குறித்து வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினர்களாக உள்ள சிலரிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அளித்த பதில் இதோ.

கம்யூனிஸ்ட் கட்சியில் எப்படி பொலிட் பீரோ உறுப்பினர்கள் கூடி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுக்கிறார்களோ, அதே போல்நாங்கள் இனி கூடி அதிமுக தொடர்புடைய முடிவுகளை எடுப்போம், அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் கொடுப்பர் என்றார்கள். அதே போல் அதிமுக சார்பில் கூட்டணி வியூகம், வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் நீக்கம் போன்றவையும் இனி அதிமுக வழிகாட்டுதல் குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறார்கள்.

அதாவது ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் ஆட்சி மன்ற குழுவிற்கு இருந்த அதிகாரம் இனி வழிகாட்டுதல் குழுவிற்கு இருக்கும் என்பது தான் இதன் சாராம்சம். ஆனால் இதற்கு அதிமுகவின் பைலா எனப்படும் சட்ட விதிகளில் திருத்த வேண்டும். அதற்கு பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். பொதுக்குழுவில் வழிகாட்டுதல் குழுவின் பணிகள், அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு ஒப்புதல் பெற்றால் மட்டுமே அது அதிகாரமிக்க குழுவாக இருக்கும்.