கட்சியை விட்டு தூக்கினால் கம்முன்னு போயிடுவார் என்று மாஜி எம்.பி. கே.சி.பழனிசாமியை கட்டங்கட்டி துரத்தியது அ.தி.மு.க. தலைமை. ஆனால் கோட்டைக்கு வெளியே நின்று கொண்டு எடப்பாடி மற்றும் பன்னீர் குறித்த ரகசியங்களை தாறுமாறாக போட்டுடைக்கிறார் அவர். 

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக நின்றவர்தான் இந்த பழனிசாமி. அணிகள் இணையும் விஷயத்திலும் தோள் கொடுத்தவர். அப்பேர்ப்பட்டவரைத்தான் கழக ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் தூக்கி வெளியே எறிந்திருக்கிறார். 

காட்டத்தின் உச்சத்திலிருக்கும் கே.சி.பி.  பன்னீரின் பெயரைத்தான் இப்போது ஓவராக டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் பன்னீரின் தர்மயுத்தம் பற்றி திருவாய் திறந்திருப்பவர், “பன்னிர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்னு சொல்லப்படுது. ஆனா, கூட இருந்த எனக்கே அது தர்மயுத்தமான்னு தெரியாது. சசிகலாவை எதிர்க்குறதுக்காக நான் அவர் கூட நின்னேன், அவ்வளவுதான். 

மக்களுக்கு சில உண்மை தெரிஞ்சாகணுமுங்க. பன்னீர்செல்வம் போட்டி அணி நடத்தி போராட்டம் நடத்திட்டு இருந்தப்ப, அவரை அந்த அணியின் சக தலைவர்கள் ‘தர்மத்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர்’அப்படின்னு மைக் முன்னாடி புகழ்ந்து தள்ளுவாங்க. ஆனால் நாலு சுவத்துக்குள்ளே ஆலோசனை நடக்குறப்ப, மிக கடுமையா விமர்சிப்பாங்க. முணுசாமி, நத்தம் விஸ்வநாதனெல்லாம் பன்னீர்ட்ட அவ்வளவு கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு பேசுவாங்க. இதற்கு பதிலா ‘என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?’ன்னு பரிதாபமாக கேட்பார் பன்னீர்.

இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க, இந்த முடிவெடுங்க, அதுக்கு பதிலடி கொடுங்கன்னு எடப்பாடி அணிக்கு எதிரா பன்னீரை தூண்டிக்கிட்டே இருப்பாங்க சக நிர்வாகிகள். ஆனா அவரோ பச்சக்குழந்தையாட்டமா பாவமா மூஞ்ச வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பார். இப்படிப்பட்ட பன்னீர்செல்வம்தான் அணிகள் இணைஞ்சதும், துணை முதல்வர் பதவியை வாங்கிட்டு நீட்டா செட்டிலாயிட்டார். 

நான் அ.தி.மு.க. தலைமையிடம் ஐம்பது கோடி ரூபாய் கடன் கேட்டேன், அது கிடைக்காத காரணத்தாலதான் பி.ஜே.பி.யை விமர்சிச்சு பேசி ஆட்சிக்கு நெருக்கடி உண்டாக்கினேன்னு ஒரு தகவல்  வெளியில சுத்துது.  இது மிகப்பெரிய பொய்!” என்றிருக்கிறார். 

கே.சி.பி.யின் கோபம் எங்கே போய் முடியப்போகிறதோ?! என்பதே பன்னீர் டீமின் அச்சம்.