what happened on tirunelveli collectorate self immolation incident

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நேற்று நடந்த மனுநீதி நாள் நிகழ்வின் போது, கந்து வட்டிக் கொடுமை காரணமாக, வாழ வழியின்றி, இசக்கி முத்து என்பவரும், அவர் மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் தீயிட்டுக் கொண்டனர். இதில் இசக்கிமுத்து தவிர மூவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இந்தப் பிரச்னைக்கு கந்துவட்டிக் கொடுமை காரணம் என்று கூறப்பட்டது. இதை அடுத்து, நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி காவல்துறையில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உயிரிழந்த சுப்புலட்சுமி மற்றும் இசக்கிமுத்து வசித்து வந்த நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் உள்ள காசிதர்மத்தில் சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம். தொடர்ந்து, காவல்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், காவல்துறையினர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணை குறித்தும் தகவல்களைக் கேட்டறிந்தோம்.

காசிதர்மத்தில் தனது மாமியார், மாமனார் வீட்டில் தனது கணவர் இசக்கிமுத்துவுடன் வசித்து வந்துள்ளார் சுப்புலட்சுமி. படித்த பெண் இவர். தங்களது குடும்ப காதுகுத்து விழாவிற்கு ரூ.60 ஆயிரத்தை 04.12.2016 அன்றும், வீடு கட்டுவதற்கு ரூ.85 ஆயிரமும் முத்துலட்சுமி என்பவரிடம் புரோ நோட்டு எழுதிக் கொடுத்து கடனாகப் பெற்றுள்ளார். மேலும், தாம் மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்க, முத்துலட்சுமியிடம் இருந்து 19 கிராம் தங்க நகையையும் பெற்றுள்ளார் சுப்பு லட்சுமி. இவை எல்லாம் முத்துலட்சுமியின் கணவர் தளவாய்ராஜ்க்கு தெரியாமல் நடந்த பரிமாற்றங்கள் எனப்படுகிறது. 

இவை தவிர, காசி தர்மம் பகுதியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவரிடம் சுய உதவிக் குழு மூலமாக 10 ஆயிரம் ரூபாய், குட்டி என்பவரிடம் 35 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அடுத்து, இசக்கியம்மாளிடம் ரூ.10 ஆயிரம் பெற்று ரூ.960 மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார் சுப்புலட்சுமி.

மேலும், தங்கராணி பவுடா குழு மூலம் பெற்ற ரூ.25 ஆயிரத்தைப் பெற்ற சுப்புலட்சுமி, அதற்கான தவணைத் தொகையை தாம் செலுத்தியுள்ளார். ஆனால், 7 மாத தவணைத் தொகை ரூ.10,500 திரும்பக் கொடுக்கவில்லையாம்.

தவிர, முப்புடாதித் தேவர் என்பவரிடம் அவரது வீட்டை ரூ.50 ஆயிரம் ஒத்திக்கு வாங்கியுள்ளார். அருகில் உள்ள ராஜ் என்பவரின் வீட்டை ஒத்திக்கு வாங்கியுள்ளனர். 

மாவட்ட ஆட்சியரிடம் சுப்புலட்சுமி பெயரில் மூன்று முறை மனு அளிக்கப் பட்டுள்ளது. அதனை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட அச்சன்புதூர் காவல் ஆய்வாளருக்கு மனு குறித்த விவரத்தை அனுப்பியுள்ளார்.
இதை அடுத்து, ஆய்க்குடி வட்ட அலுவலகத்தில் ஆஜராகுமாறு, சுப்புலட்சுமிக்கு அச்சன்புதூர் ஆய்வாளர் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், 
தாங்கள் கடந்த 04.09.2017, 18.09.2017 மற்றும் 25.09.2017 ஆகிய தேதிகளில் கனம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக, உரிய ஆவணங்களுடன் 09.10.17ம் தேதி காலை 10 மணிக்கு ஆய்க்குடி வட்ட அலுவலகத்தில் விசாரனைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது - என்று கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதத்தை, அப்போதிருந்த அச்சன்புதூர் ஆய்வாளர், சுப்புலட்சுமி இல்லத்துக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பி வைக்கிறார். ஆனால் அது திருப்பி அனுப்பப் படுகிறது. 

இதனிடையே, மனுதாரர் கண்ணம்மாள் என்பவர், சுப்புலட்சுமி மீது கொடுத்த மனு, அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. உதவி ஆய்வாளரிடம் அளித்த அந்த மனுவில், 
தான் மூன்று மாதங்களுக்கு முன்னர் ரூ.65,000 வாங்கியதாகவும், அதற்கு 10 நாட்களுக்கு ரூ.6,500 வட்டி கொடுப்பதாகவும், தனது 48 கிராம் மதிப்புள்ள மூன்று செயின்களை சுப்புலட்சுமியின் பெயரில் கடையநல்லூரில் உள்ள முத்தூட் பைனான்சில் அடகு வைத்திருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.95 ஆயிரம் என்றும் கூறியுள்ளார். அந்த ரசீதை தான் கேட்கும் போது அதைத் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறியுள்ள கண்ணம்மாள், ஆனால் சுப்புலட்சுமி தனக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளதாகப் பொய் கூறி, சண்டையிடுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார். 

இதற்கு முன்னர் புகார் மனு ஒன்று பதிவு செய்யப்பட்டு, அதற்காக விசாரணைக்கு ஆஜராகுமாறு, அக்.13ம் தேதியிட்டு அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் மூலம் சுப்புலட்சுமியின் இல்லத்துக்கு அனுப்பப் பட்ட கடிதம், வீடு பூட்டப் பட்டிருப்பதாக ஸ்பீட் போஸ்ட் மூலம் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறது.

இதை அடுத்து, சுப்புலட்சுமி அந்த வீட்டில்தான் வசிக்கிறாரா என்பது குறித்த விசாரணை செய்யப்பட்டு, அதனை சம்பந்தப்பட்ட விஏஓ சான்று ஒப்பம் அளித்துள்ளார். அவர் அளித்த கடிதத்தில், 

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அளித்த சான்று...

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் காசிதர்மம் கிராமம் கதவு எண் 27/7 எம்.ஜி.ஆர். நகர் என்ற முகவரியில் குடியிருந்து வந்த திரு.இசக்கிமுத்து மனைவி திருமதி சுப்புலட்சுமி என்பவர் கடந்த மூன்று (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்) தற்காலிகமாக குடியிருப்பில் இல்லை என்ற விவரத்திற்கு சான்று வழங்கப்படுகிறது...

என்று 16/10/17ம் தேதியிட்ட கையெழுத்திட்டு சான்று கொடுத்துள்ளார். 



இதனிடையே பணப் பிரச்னை தொடர்பாக போலீஸில் புகார் செய்திருந்த முத்துலட்சுமி போலீஸாரிடம், சுப்புலட்சுமி தனக்குத் தரவேண்டிய பணம் சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்வதாகவும், தானும் தன் கணவரும் பணப் பிரச்னை தொடர்பாக சுப்புலட்சுமியையோ அவரது கணவரையோ பேசவோ மிரட்டவோ இல்லை என்று வாக்குமூலம் எழுதிக் கொடுத்துள்ளனர். 

கண்ணம்மாள் விவகாரத்தில் சுப்புலட்சுமி எழுதிக் கொடுத்த சமரசக் கடிதம்... 

ஊருக்குள் கடன் பிரச்னை அதிகரித்ததால், ஊரைவிட்டு வெளியேறிய சுப்புலட்சுமி, கோவைக்குச் சென்றதாகவும், அவர் அங்கிருந்தபடியே தனது கணவருடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்ததாகவும், பின்னர் அங்கிருந்து அவர் கோவைக்குச் சென்றதாகவும் கூறுகின்றனர் போலீஸார். 

இந்த நிலையில், தாம் ஆட்சியரிடம் அளித்த மனுக்களின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆய்க்குடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறிய போலீஸாரின் கடிதமும் அவருக்குக் கிடைக்கவில்லை. அதே நேரம், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலகத்துக்கு கோவையில் இருந்து நேராக வந்துள்ளார் சுப்புலட்சுமி என்கிறார்கள். 

அவ்வாறு வந்தவரிடம், யாரோ ஒருவர் மண்ணெண்ணெய் விட்டு தீக்குளிப்பது போல் செய்தால், ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுப்பார் என்பதாகக் கூற, அப்படியே கணவன் மனைவி இருவரும் செய்துள்ளனராம். 

இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது முழு விசாரணையும் முடிந்த பின்னர்தான் வெளிவரும். காரணம், எல்லா இடங்களிலும் இசக்கி முத்துவின் மனைவி சுப்புலட்சுமி பெயர்தான் பதிவாகியுள்ளதே தவிர, இசக்கிமுத்து நேரடியாக எதிலும் சம்பந்தப் படவில்லை. எனவே, இது முழுக்க முழுக்க பெண்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்க வழக்கம் மற்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை என்றே தெரிகிறது, 

அண்டை வீட்டாருடன் நெருங்கிப் பழகி, அக்கா தங்கச்சி என்றவாறு உறவு கொண்டாடி, அந்த இயல்பின் மூலம் கடன் வாங்கி இப்படி கஷ்டப் பட்டுள்ளார் சுப்பு லட்சுமி. அதோடு கடன் கொடுத்த முத்துலட்சுமியும்தான்! அவரும் தன் கணவருக்குத் தெரியாமல் பழக்கத்தின் காரணத்தால் கடன் கொடுத்துள்ளதாகவும், தான் இதற்கு முன் எவருக்கும் வட்டிக்கு கடன் கொடுத்தது இல்லை என்றும் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஓர் இடத்தில் கடன் பெற்று இன்னொருவரிடம் கொடுத்து, அவரிடம் இருந்து வட்டி பெற்றும், இன்னொருவரிடம் நகை பெற்று பைனான்ஸில் அடகு வைத்து அந்தப் பணத்தை வேறொருவரிடம் கொடுத்தும் ஏதோ சில சிக்கல்களைச் சந்தித்துள்ளார் சுப்புலட்சுமி. 

தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்றுப் பணத்தை உரியவர்களிடம் கொடுத்திருக்கலாமே என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, அதற்கு அவரது மாமனார் மாமியார் தடுத்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர் அருகில் வசிப்போர். 

படித்த பெண்ணாக இருந்தாலும், ஒரு பெண்ணின் கொடுக்கல் வாங்கலால் அவரது வாழ்க்கை மட்டுமல்ல, இரு பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்களும் அநியாயமாய் பறிபோனது அங்கிருப்பவர்களிடம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கெனவே இதுகுறித்து கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சுப்புலட்சுமி. வற்புறுத்தி, தன் கையெழுத்தைப் பெற்று போலீஸ் வரை சென்றுவிட்டார் தன் மனைவி என்றும், தன் பேச்சைக் கேட்காததால் அவரை அடித்ததாகவும், அதனால் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்றும் இசக்கிமுத்து குற்றச்சாட்டு தெரிவிக்கிறார். இதனை ஒரு ஆடியோ பதிவில் குறிப்பிடுகிறார் இசக்கிமுத்து. 

ஆட்சியர் அலுவலகத்தில் நால்வரும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் பெட்ரோல் ஊற்றி தங்கள் மீது தீவைத்துக் கொண்டதாக அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகின்றனர். இன்னும் சில மர்மங்கள் இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ளது. அவை விசாரணை முடிவில்தான் தெரியவரும் என்கின்றனர்.

இப்படி காவல் துறையினரிடம் விசாரணைக்குச் சென்று வந்து, புகார் கொடுத்து, சமரசம் பேசி, சமரசத்துக்கு உடன்பட்டு ஒப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து என்று எத்தனையோ சிக்கல்களை இந்தப் பெண் சந்தித்திருப்பதால் இதிலுள்ள உண்மைகள் மேலும் வெளிவந்தால்தான் இதன் பின்னணி தெளிவாகத் தெரியும்.