What happened in Cuddalore study Governors House Description
ஆளுநர் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்படவில்லை எனவும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார் எனவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினார்.
இதைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, திமுகவினர், ஆய்வுக்கு வரும் கவர்னருக்கு கடலூர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என அறிவித்தனர்.
அதனபடி இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் புரோஹித்துக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களை திட்டமிட்டுவைத்திருந்த பிளான் மாறி போனது.
தொடர்ந்து வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளுக்கு ஆளுநர் சென்றார். அம்பேத்நகரின் தெருக்களுக்குள் செல்லும் போது, வீட்டு வாசலில் உள்ள கீற்று மறைப்புக்குள் இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
ஆனால் அது குளியலறை என தெரியாமல் வந்த ஆளுநரை கண்டு அங்கு குளித்து கொண்டிருந்த இளம்பெண் அலறி ஓடியதாக செய்திகள் வெளியாகியது.
இதையடுத்து ஆய்வை முடித்து கொண்டு ஆளுநர் பன்வாரிலால் காரில் சென்னை திரும்பினார். அவர் காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான பாதுக்காப்பு படையினர் காரில் பயணம் செய்தனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது பாதுகாப்பு படையினரின் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர்கள் 3 பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் ஆளுநர் தரப்பு இச்சம்பவங்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறையை உறுதி செய்த பின்னரே ஆய்வு நடைபெற்றதாகவும் ஆய்வு குறித்து முறையற்ற தவறான தகவல் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து ஆளுநர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ஏற்படவில்லை எனவும் ஆளுநர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
