கட்டக் கடைசியில் நம்ம கேப்டனின் நிலைமையும் இப்படி ஆகிவிட்டது பார்த்தீங்களா?.... தே.மு.தி.க.வை நேற்றிலிருந்து சுழன்றடிக்கும் அதிர்ச்சி இதுதான். அக்கட்சியின் நிர்வாகிகள் இதைத்தான் மாய்ந்து மாய்ந்து மனம் நொந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

அப்படி என்ன நடந்துவிட்டது தே.மு.தி.க.வில்?...

சென்னை அனகாபுத்தூரில் தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வா நேற்று நடந்ததிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் முதன் முறையாக அரசியல் கலந்த தனது பொதுமேடை பேச்சை துவக்கியிருக்கிறார்.

மேடையில் “இந்த நாட்டுல எல்லா துறைகளிலும் பிரச்னை இருக்குது. இதை சரி செய்ய நல்ல தலைவர்கள் வர வேண்டும். அந்த தலைவர் யார்ன்னு உங்களுக்கே தெரியும். அப்பாதான், அது. அவர் விரைவில் தொண்டர்களை சந்திப்பார்.” என்றவர் திடீரென மூச்சிறைக்க...”எத்தனை பேர் வந்தாலும் தே.மு.தி.க.வில் இருந்து ஒரு செங்கல்லை கூட எடுக்க முடியாது. 

நான் உங்களுடன் நல்ல நண்பனாக இருப்பேன். கண்டிப்பா சாதிப்போம். அடுத்த ஆட்சி தே.மு.தி.க. ஆட்சிதான், உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்.” என்று வேர்க்க விறுவிறுக்க பேசிவிட்டு அமர்ந்திருக்கிறார். 

விஜய் பிரபாகரனின் இந்த திடீர் பொதுமேடை தரிசனம் தே.மு.தி.க.வுக்குள்ளேயே குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. இதைப்பற்றி கடுப்பு மற்றும் கவலையுடன் பகிர்ந்து  கொள்ளும் கழக சீனியர்கள், “கேப்டன் அப்படிங்கிற ஒரு மனிதரை நம்பித்தான் இந்த கட்சியில இத்தனை வருஷமா பல தோல்விகள், கஷ்ட நஷ்டங்களுக்கு நடுவில் நாங்க வாழ்ந்துட்டு இருக்கிறோம். உடல் நலம் சரியில்லாத தலைவர் மீண்டு வருவார், மீண்டும் வருவார் அப்படிங்கிற நம்பிக்கையில்தான் இருந்தோம். 

ஆனா இப்போ இங்கே நடக்குற விஷயங்கள் சரியாப்படலை. ஜெயலலிதாவோட உடல் நிலைக்கு என்னதான் பிரச்னைன்னு வெளிப்படையா சொல்லாம, அப்பல்லோ ஆஸ்பிடல்லேயே வெச்சு மறைச்சப்போ ’முதல்வரின் உடல் நிலைக்கு என்னதான் பிரச்னைன்னு வெளிப்படையா அரசும், அ.தி.மு.க.வும் சொல்லணும்.’ அப்படின்னு பொங்கினார் எங்க தலைவர். 

ஆனால், இப்போ எங்க தலைவரோட உடலுக்கு என்னதான் ஆச்சு? இதைத்தான் நாங்க கேட்கிறோம். ரெண்டு மாசங்களுக்கு முன்னாடி அமெரிக்காவுக்கு அவரை கூட்டிட்டு போறப்ப ‘ஹைடெக் சிகிச்சைக்காக கேப்டன் அமெரிக்கா போறார். திரும்பி வர்றப்ப பழைய பன்னீர்செல்வம் மாதிரி, கம்பீரமா வருவார். அவரோட பேச்சு பழையபடி பந்தாவா மாறிடும். சிங்கம் மாதிரி கர்ஜிக்கப்போறார்’ அப்படின்னு ஓவரா நம்பிக்கை தந்தாங்க. நாங்களும் எங்க தலைவரை பழைய மிடுக்கில் காண காத்திருந்தோம். 

ஆனா முக்கால்வாசி ட்ரீட்மெண்ட் முடிஞ்ச நிலையில், கருணாநிதியின் மரணத்தன்னைக்கு அமெரிக்காவிலிருந்து எங்க தலைவர் வெளியிட்ட வீடியோவில் அவர் பேச்சை பார்த்ததும் அரண்டுட்டோம். காரணம்? அவரோட பேச்சில் எந்த முன்னேற்றமுமில்லை. இங்கே இருக்குறப்ப எப்படி புரியாதபடி பேசினாரோ அதே நிலைதான் அமெரிக்கா போன பிறகும் இருந்துச்சு. இது எங்களுக்கு பேரதிர்ச்சி. 

இதுமட்டுமில்லாம, தலைவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் நேரடியாக திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக்குவார்!ன்னு சொன்னாங்க. ஆனா அந்த மாநாட்டையே தேதி குறிப்பிடாம ஒத்தி வெச்சுட்டாங்க. இது எங்களுக்கு நம்பிக்கை சரிவை தந்துச்சு. 

இதுமட்டுமா?...அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆன எங்க தலைவர் கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தப்போன காட்சிகளை பார்த்து கண் கலங்கிட்டோம். அவரால் நாலு ஸ்டெப் கூட தானாக நடக்க முடியலை. தள்ளாடுறார், கம்பியை பிடிச்சுட்டு கூட அவரால் நிற்க முடியலை. 

ஆக எங்க தலைவருக்கு என்னதான் ஆச்சு? ஏன் இப்படி நாளுக்கு நாள் டல்லாகிட்டே போறார்? இதை எங்களுக்கு வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயம் பிரேமலதா, சுதீஷூக்கு இருக்குது. இரு பெரும் திராவிட கழகங்களையும் எங்க கூட கூட்டணிக்கு அலையவிட்ட நாட்கள் நியாபகம் இருக்குதா? இந்த கட்சி அப்படி உயர்ந்து நிற்க எங்களை மாதிரி லட்சக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும்தான் காரணம். அந்த பெருமையை கொடுத்த எங்களுக்கு, தலைவரின் உடல் நலனின் உண்மைத்தன்மையை தெரிஞ்சுக்க உரிமை இருக்குது. 

இந்த நிலையில, திடீர்னு கேப்டனின் மூத்த பையன் கட்சி மேடையில் வந்து நிற்கிறார், ‘உங்களுக்கு நண்பனாக இருப்பேன், உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்!’ அப்படிங்கிறார். எங்களின் எதிர்ப்பார்ப்பு கேப்டன் மட்டும்தான். அவரை உட்கார வெச்சுட்டு இவர் என்ன பூர்த்தி செய்ய போறார்? அப்போ கேப்டன் தீவிர அரசியலுக்கு வரமாட்டாரா? கேப்டன் இல்லாத கட்சியில் எங்களுக்கு என்ன வேலை?” என்று பொரிந்து தள்ளிவிட்டார்கள். 

அதேவேளையில், தன் மகனை கட்சி மேடையில் ஏற்றி பேசவைத்து, அரசியலுக்குள் கொண்டு வரும் விஜயகாந்தை நோக்கி பொதுவான அரசியல் விமர்சகர்கள் வைக்கும் அனல் வாதம் இதுதான்...”உங்கள் சொந்த கட்சிக்குள், உங்கள் சொந்த மகனை கொண்டு வருவது உங்கள் உரிமை. ஆனால் அன்று கருணாநிதியை ‘வாரிசு அரசியல் நபர்’ என்று சொல்லித்தானே வாய் வலிக்க திட்டுனீர்கள்? மீசை முளைக்காத காலத்திலேயே அரசியலுக்கு வந்து, அடிபட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த ஸ்டாலின் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், உங்கள் மகன் பிரபாகரன் எந்த போராட்டத்தில் நின்றார், எந்த ஆர்பாட்டத்தில் கலந்தார், எத்தனை முறை சிறைசென்றார், கழகத்தில் எத்தனை ஒன்றியங்கள் இருக்குது, கிளை நிர்வாகிகள் பெயர் தெரியுமா அவருக்கு? இவரை நீங்கள் கொண்டு வருவது மட்டும் வாரிசு அரசியல் இல்லாமல் என்னவாம்?” என்று கேட்டிருக்கின்றனர். 

தன்னை புரட்டி எடுக்கும் விமர்சன மழையால் மிரண்டு கிடக்கிறார் கேப்டன்.