நடிகர் விஜய் தனது தந்தை எஸ்ஏசியுடன் கடந்த சில வருடங்களாகவே அவ்வளவு சுமூகமாக இருந்ததில்லை என்கிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு வரை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பது தான் விஜயின் தாரகமந்திரமாக இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டிற்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது. அதுநாள் வரை சென்னை சாலிகிராமத்தில் தனது தந்தையுடன் வசித்து வந்த விஜய் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு நிரந்தரமாக தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்றே கூறலாம். இதற்கெல்லாம் காரணம் தந்தை எஸ்ஏசியின் தன்னிச்சையான முடிவுகள் தான் என்கிறார்கள்.

தற்போது வரை கூட நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கான கதைகளை எஸ்ஏசி தான் கேட்டு வருகிறார். மகனின் கால்ஷீட் உள்ளிட்ட விவரங்களையும் அவர் தான் இறுதி செய்கிறார். விஜயுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் தேர்விலும் எஸ்ஏசி பங்கு இருந்தது. ஆனால் இதனை எல்லாம் கடந்த சில ஆண்டுகளாக விஜய் குறைத்துவிட்டார். இதனால் தான் தனியாக திரைப்படம் எடுக்கும் வேலையில் எல்லாம் எஸ்ஏசி இறங்கினார்.

டிரண்டிற்கு தகுந்தாற்போல் தனது தந்தை அப்டேட் ஆகவில்லை என்று கருதும் விஜய் கடந்த சில வருடங்களாக தன்னிச்சையாக கதை கேட்டு தனது தந்தையிடம் அதனை கூறி ஒப்புதல் பெற்று படங்களில் நடித்து வருகிறார். ஆனால் படத்தின் பிசினஸ், சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களில் எஸ்ஏசி தலையிட விஜய் அனுமதிப்பதில்லை என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கடந்த 2011ம் ஆண்டு அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தது பிறகு 2014ல் மோடிக்கு ஆதரவு கொடுத்தது போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த இரண்டு நிலைப்பாடுகளின் பின்னணியிலும் விஜயின் தந்தை எஸ்ஏசியின் கைங்கர்யம் உள்ளது.

ஜெயலலிதா மற்றும் மோடி ஆகிய இரண்டு பேரையும் தேடிச் சென்று விஜய் ஆதரவு கொடுத்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவராலுமே விரட்டி விரட்டி விஜய் வேட்டையாடப்பட்டார். ஜெயலலிதா இருந்த வரை விஜயின் எந்த படத்தையும் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த நிலைமை தற்போதைய அதிமுக ஆட்சியிலும் நீடிக்கிறது. இதே போல் மோடி அரசு பதவியேற்றது முதலே வருமான வரித்துறையால் விஜய்க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் தனது தந்தையின் தவறான அரசியல் நிலைப்பாடு தான் என்கிறார்கள்.

மேலும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்என்று எஸ்ஏசி மகனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிலும் தற்போதைய சூழலில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று எஸ்ஏசி திரும்ப திரும்ப விஜயிடம் கூறி வருகிறார். அனால் இந்த சூழலில் அரசியல் வேண்டாம் அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பார்த்துக கொள்ளலாம் என்பது விஜயின் நிலைப்பாடு. ஆனால் இந்த தேர்தலில் திமுகவுடன் இணைந்து அரசியல் ஆழம் பார்த்துவிடலாம் இதற்கு மக்கள் இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எஸ்ஏசி திட்டவட்டமாக தனது மகனிடம் கூறியதாக சொல்கிறார்கள்.

இதனால் தான் அண்மையில் மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென அழைத்த விஜய் தனது நீலாங்கரை வீட்டில் வைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது விஜய் கூறிய முக்கிய தகவலே மன்றம் தொடர்பான செயல்பாடுகளில் தனது தந்தையின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் என்பது தான். மேலும் மன்ற செயல்பாடுகளில் இனி ரசிகர் மன்ற தலைவரான புஸ்ஸி ஆனந்தை மட்டுமே கலந்து ஆலோசிக்குமாறும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இப்படி ரசிகர் மன்ற நிர்வாகிகளை நீலாங்கரை வீட்டிற்கு அழைத்து விஜய் இப்படி ஒரு உத்தரவு போட்ட கடுப்பில் தான் எஸ்ஏசி தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி எஸ்ஏசியின் அரசியல் ஆசை, பதவி மோகத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் விஜய். எது எப்படியோ தந்தை – மகன் மோதலால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தான் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.