விமான நிலையத்தில் வைத்து தன்னிடம் பாதுகாப்பு படை வீராங்கனை இந்தி தெரியாது என்றால் நீங்கள் இந்தியரா என்று கேட்டதாக கனிமொழி கூறிய புகார் தற்போது விஸ்வரூபம் எடுக்க உள்ளது.

விமான நிலையத்தில் வைத்து தனக்கு இந்தி தெரியாது என்பதால்தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு சிஐஎஸ்எப் அதிகாரியை கேட்ட போது இந்தி தெரியாது என்றால் நீங்கள் என்ன இந்தியரா? என அந்த அதிகாரி கேட்டதாக கனிமொழி கடந்த 9ந் தேதி போட்ட ட்வீட் நாடு முழுவதும் விவாதப் பொருள் ஆகியுள்ளது. இந்தி தெரியாது என்றால் இந்தியர் இல்லையா? இது இந்தியாவா? ஹிந்தியாவா என்று விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் கடந்து கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்தெல்லாம் கனிமொழிக்கு ஆதரவு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் இந்த விஷயத்தை வைத்து அரசியல் ஆரம்பமாகியுள்ளது. கனிமொழிக்கு இந்தி தெரியும் என்றும் அவர் இந்தி தெரியாது என்று பொய் கூறுகிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் முன்னாள் துணை பிரதமர் தேவி லால் சென்னை வந்த போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய இந்தியை தமிழில் மொழி பெயர்த்தது கனிமொழி தான் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.

இதன் மூலம் இந்தி தெரிந்த கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று விமான நிலையத்தில் கூறினாரா? அல்லது உண்மையில் எந்த ஒரு அதிகாரியும் வந்து கனிமொழியிடம் இப்படி கூறியிருப்பாரா? என்று சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கிடையே கனிமொழி இந்தியை வைத்து அரசியல் செய்துள்ளார், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவிற்கு எதிரான வியூகமாக திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. அதே சமயம் இந்த விஷயம் தொடர்பான விசாரணையும் தீவிரம் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.

விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி தன்னிடம் நீங்கள் இந்தியரா? என கேள்வி எழுப்பியதாக கனிமொழி ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சிஐஎஸ்எப் பதில் ட்வீட் செய்தது. கனிமொழியும் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனிடையே கனிமொழி தனது ட்வீட்டில், தனக்கு எந்த விமான நிலையத்தில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது என்பதை பொதுவெளியில் கூறவில்லை. உதாரணமாக டெல்லி விமான நிலையமா? அல்லது சென்னை விமான நிலையமா என்று அவர் குறிப்பிடவில்லை.

இருந்தாலும் கூட இரண்டு விமான நிலையங்களின் சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. சம்பவம் எப்போது நடந்தது, எந்த நேரத்தில் நடந்தது என்றும் கனிமொழி குறிப்பிடவில்லை. இருந்தாலும் கனிமொழி ட்வீட் போட்ட தினத்தை சம்பவம் நடைபெற்ற தினமாக நினைத்து சிஐஎஸ்எப் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. விமான நிலையத்தில் கனிமொழி எங்கு சென்றார், அவர் யாரிடம் எல்லாம் பேசினார் என்பது தான் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட உள்ளது.

இதற்கிடையே விசாரணை அதிகாரிகள் கனிமொழியை இந்த விஷயம் தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளதாகவும், தொடர்பு கொள்ள உள்ளதாகவும் இரு வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது விசாரணைக்கு தேவையான தகவல்களை அதாவது எந்த விமான நிலையத்தில், எத்தனை மணிக்கு உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது என்பதை தெரிவித்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று சிஐஎஸ்எப் தரப்பு கனிமொழியிடமே விசாரிக்க உள்ளதாகவும் அதற்கு கனிமொழியின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

விசாரணையின் முடிவில் கனிமொழி கூறியது உண்மையாக இருப்பின் அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி தற்போது வரை சிஐஎஸ்எப்பிடமோ அல்லது விமான நிலைய நிர்வாகத்திடமோ முறைப்படி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.எனவே கனிமொழி எந்த விமான நிலையத்தில் தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது, என்று நடந்தது, எப்போது நடந்தது என்பதை வெளிப்படையாக கூறினால் பல்வேறு சர்ச்சைகள் முடிவிற்கு வரும்.