ஈரோடு மண்ணில் நடந்து வரும் தி.மு.க.வின் இரண்டு நாட்கள் மண்டல மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்கள். 

அந்த வகையில் பேச வந்த லியோனி, ’சங்கே முழங்கு’ என பாட்டில் துவக்கினார் தன் பேச்சை. தனக்கு வழங்கப்பட்ட தலைப்பில் பேச்சை தொடராமல் சிவாஜி, எம்.ஆர்.ராதா, பி.எஸ்.வீரப்பா, அண்ணாதுரை, கருணாநிதி என்று பலரைப் போல் பேசிக்காட்டி அந்த மேடையை மிமிக்ரி மேடையாக்கி சிரிக்க வைத்தார். 

இந்த நிலையில் கமல், ரஜினி அரசியலுக்கு வருவதால் தி.மு.க.வுக்கு எந்த பிரச்னையும் இல்லை! என்றவர், ரஜினி கட்சியே துவக்கவேயில்லை அதற்குள் 234 தொகுதிகளிலும் போட்டி என்கிறார். என்ன கொடுமைண்ணே இது? என்றவர். 

அவரு தனது மன்ற நிர்வாகிகளை மண்டபத்துக்கு அழைத்தார். கூப்பிட்டு ‘நான் என்னோட வேலையை பார்க்கிறேன், நீங்க உங்க வேலையை பாருங்க’ அப்படின்னுட்டார். நொந்துட்டானுங்க நிர்வாகிங்க. அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியவில்லை, திடீர்ன்னு ‘சட்டமன்ற தேர்தல் சமயத்துல கட்சி துவங்குறோம், 234 தொகுதியிலும் நிக்குறோம்.’ன்னு சொல்றார்.

இது சாதாரண விஷயமா? தேர்தல் அரசியல் வேணுமா? வேண்டாமா?ன்னு ஓட்டுப்பெட்டி வெச்சு தொண்டர்களை கேட்டு முடிவு செஞ்சார். ஆனால் இவரு தொண்டர்களே இல்லாமல் கட்சியை ஆரம்பிக்கிறார்.” என்று நக்கலடித்துவிட்டு நகர்ந்தார். 

இவருக்கு அடுத்து ‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ எனும் தலைப்பில் பேச வந்த மாஜி அமைச்சர் பொன்முடி, வீரபாண்டிய கட்டப்பொம்மன்  டயலாக்கை பேசிவிட்டு, பின் அதை அப்படியே உல்டாவாக்கி, ‘எங்களோடு நீட் போராட்டத்துக்கு வந்தாயா? ஜி.எஸ்.டி.யை எதிர்த்தாயா? தமிழனா, தன்மானம் உள்ளவனா? மானம் கெட்டவனே!” என்று பொங்கிப்பேச, ஸ்டாலினின் முகத்தில் பெரும் புன்சிரிப்பு. 

பொன்முடிக்குப் பின் பேசவந்த துரைமுருகன் “இந்த மாநாட்டிலிருந்து ஒரு முடிவெடுக்கலாம். இனி தம்பி ஸ்டாலினை பற்றி பேசும்போது, எழுதும்போது, போஸ்டர் அடிக்கும் போது ‘தளபதி’ என்று குறிப்பிட வேண்டாம். செயல் தலைவர்! என்றே குறிப்பிடுங்கள்.” என்றார். 

ஆக இந்த மாநாடு மூலமாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.