தமிழக மக்கள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? தமிழ்நாட்டை எப்படியெல்லம் வஞ்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்கிறார்கள்.
பாஜக ஆட்சியில் பெரும்பான்மை மக்களுக்காக என்ன செய்தீர்கள்? பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் இல்லையா? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் பாஜகவுக்கு ஆதரவு சற்று அதிகம் என்பதால் அங்கு பாஜகவை விமர்சித்து கனிமொழி பிரசாரம் செய்தார். “ பாஜக - அதிமுக இடையே உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லையாம். ஆனால், தேசிய அளவில் கூட்டணி இருக்கிறது. மாநில அளவில் கூட்டணி இருக்கிறது. இப்படி சொன்னாலும் நீங்கள் இருவரும் ஒன்றுதான் என்பது மக்களுக்குத் தெரியும். இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால்தான் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள், சிறுபான்மையினருக்கு எதிராக குடியுரிமைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, மாநில உரிமைகள் பறிக்கப்பட்டபோது, நீட் தேர்வுகள் கொண்டு வரப்பட்டப்போது எதையுமே அதிமுக எதிர்க்கவில்லை. போராடிய தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள், பெண்கள் மீது வழக்குப் போட்டது அதிமுக ஆட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

தமிழ்நாட்டுக்கு புயல், வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு தர வேண்டியது ரூ. 6230 கோடி, ஆனால், கொடுத்திருப்பது ரூ.816 கோடி. நமக்கு முழு தொகையை தர ஏன் மறுக்கிறார்கள். ஏனென்றால், தமிழ்நாடு மக்களுக்கு எந்த நல்லதும் செய்யமாட்டார்கள். நமக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து கொடுக்க வேண்டிய பங்கு கிட்டத்தட்ட ரூ. 5 ஆயிரம் கோடி. அதை இன்னும் தரவில்லை. அந்தத் தொகை வந்தால், எத்தனை பேருக்கு தமிழ்நாட்டில் பயன்படக்கூடிய திட்டங்கள், பணிகளை செய்ய முடியும். பிறகு தமிழக மக்கள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? தமிழ்நாட்டை எப்படியெல்லம் வஞ்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்கிறார்கள். ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பில் ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய பங்கும் கொடுக்காமல் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 25 ரயில்வே திட்டங்களுக்கு ரூ.28,307 கோடி தேவை. பட்ஜெட்டில் ரூ. 3865 கோடிதான் ஒதுக்கியிருக்கிறார்கள். ரயிலில் பெரும்பான்மை மக்கள் செல்லமாட்டார்களா? அவர்களுக்கு இது உதவாதா?

ஏதோ பெரும்பான்மை மக்கள் மீது இவர்களுக்குத்தான் அக்கறை இருப்பதைப்போல பேசி மக்களை திசை திருப்பிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வஞ்சனை, துரோகத்தை செய்துக்கொண்டிருக்கும் பாஜக இங்கு வந்து வாக்கு கேட்டு வந்தால், இதையெல்லாம் நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் ரயில்வே, தபால், வங்கி எதிலும் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு இல்லாத நிலையை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியிருக்கிறது. நமக்கு அங்கு வேலை பார்க்க உரிமை கிடையாதா? வட நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அங்கு வேலை கொடுக்கிறார்கள். இங்கு மதத்தை வைத்து பேசி மக்களைப் பிரித்து வந்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். திமுக பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக தவறான செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கோயில்களுக்கு எதிரானவர்கள் திமுகவினர் என்று பேசுகிறார்கள். தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பது முக்கியமல்ல. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வித்தியாசம்கூட தெரியாமல் அவர்கள் இருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கன்னியாகுமரியில் 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு கோயிலை அமைச்சர் பார்வையிட்டு ரூ. 1 கோடி இதுக்கினார். திருவெட்டாறு ஆதிகேச பெருமாள் கோயிலில் பணிகள் செய்ய ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறப் பூசாரிகளுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு அரசாக எதையெல்லாம் செய்யவேண்டுமோ, அந்த நேர்மையிலிருந்து திமுக ஒரு துளிக்கூட விலகியதில்லை. ஆனால், உங்களுடைய ஆட்சியில் பெரும்பான்மை மக்களுக்காக என்ன செய்தீர்கள்? மத்திய அரசு அலுவலங்களில் எத்தனை பெரும்பான்மை மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறீர்கள்? பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் இல்லையா? அவர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? எனவே தமிழ் நாட்டில் இப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். நாம் அமைதியாக நிம்மதியாக இருக்கிறோம். மற்ற இடங்களைப் போல இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள் இங்கு கிடையாது. இந்தக் கலவரங்கள் வந்தால் முன்னேற்றம் இருக்காது. நாம் முன்னேற்றப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறோம். நம்மை யாரும் பின்னால் இழுக்க விட்டுவிடாதீர்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு துளி இடம் கூட தந்துவிடக் கூடாது. .அந்த உறுதியோடு இந்தத் தேர்தலில் நீங்கள் வாக்களியுங்கள்” என்று கனிமொழி பேசினார்.
