What can be done on the case of Karunas
கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திமுக நடத்திய மாதிரி சட்டமன்றக் கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸும் கலந்துகொண்டு தமிழகத்திற்கு விடிவுகாலம் வருமேயானால் கூவத்தூர் ரகசியத்தை சொல்ல தயங்கமாட்டேன் என ஆளுங்கட்சியை அலறவிட்டதால், கருணாஸ் மீது செம கடுப்பில் இருக்கிறது எடப்பாடி & டீம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மாதிரி சட்டமன்றக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.
மாதிரி சட்டசபையில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், எந்த வித உரிமைகளும் இல்லாத அந்த மன்றம் எதுக்கு? அது சட்டமன்றம் அல்ல வெட்டி மன்றம். அவர்களே அவர்களுக்காக குரல்கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தற்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் செய்தேன், நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்னால் உங்க வீட்டில் இருந்து எடுத்து வந்த பணத்திலா அதை செய்திர்கள்? ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை அது என ஆளும் கட்சியை அக்கு அக்காக கிழித்துத் தொங்கவிட்டார்.
போராடக்கூடிய மக்களை துப்பாக்கி கொண்டு கூறி பார்த்து நடத்திய படுகொலையை நடத்தியது யார்? அதற்கு உத்தரவிட்டது யார்? என்பது தான் அனைவரின் கேள்வியும். ஆம்.. நான் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றவன்தான் அதற்கு? தவறு என்கிற பட்சத்தில் மக்களால் வாக்களிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படை உரிமையில் பேசுவதற்கு அனுமதி கோரினேன்.
மக்களுக்கான ஒரு ஆட்சி, மக்களை குறைகளை போக்ககூடிய ஒரு ஆட்சி, மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்சி, மக்களின் உரிமைக்களுக்காக போராடக் கூடிய ஒரு ஆட்சி, மக்களுக்காக மக்களுடனேயே வாழ்ந்து காட்ட கூடிய ஒரு ஆட்சி இந்த தமிழகத்தில் வேண்டும். அது ஸ்டாலின் தலைமையில் உருவாக வேண்டும். என்பது தான் என்னுடைய ஆசை. என்னுடைய ஆவல். அன்றைக்கு எனக்கு சட்டமன்ற வாய்ப்பு கிடைத்து விடும் என்பதற்காக அல்ல. நான் மிகமிக ஆர்வபட்டுவந்தேன். நடப்பதை எல்லாம் பார்த்தேன். போதும். கூவத்தூரில் ஏற்பட்ட அவமானங்கள் போல வேற எந்த அவமானமும் எனக்கு ஏற்படப்போவதில்லை. யார் ஒருவரும் என்னை பார்த்து விரல் நீட்டி பேசியது கிடையாது. ஆனால் அத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறேன் என்றார்.
மேலும், தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன் என அதிரடியாகப் பேசி ஆளும் கட்சியை அலறவிட்டார்.
கருணாஸின் இந்த காட்டமான விமர்சனத்தால், ஆளும் கட்சி பயங்கர கோபத்தில் இருக்கிறதாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை நேரடியாக கருணாஸ் எங்கேயும் விமர்சனம் செய்யவில்லை. இப்போதுதான் நேரடியாக அதிமுகவை எதிர்க்க ஆரம்பித்துள்ளார். இனி திமுகவுடன் கூட்டணி என கருணாஸ் முடிவுக்கு வந்து விட்டதாகவே சொல்கிறார்கள்.
அதே நேரத்தில், கருணாஸ் மீது என்ன சம்பவத்தில் கேஸ் போட்டு கைது செய்யலாம் என எடப்பாடி & டீம் டீப் டிஸ்கஷனில் இருக்கிறதாம். கூடிய சீக்கிரம் வேல்முருகன் போல எதாவது ஒரு சம்பவத்தில் கருணாஸ் மீதும் கேஸ் போட இருக்கிறார்களாம்!
