திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டத்தில் பரவியுள்ள நிலையில் ,  மேற்கு வங்கத்தில்  புதிய குடியுரிமை சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 30, 000 தன்னார்வலர்களை பாஜக நியமித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை  எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது .  பாகிஸ்தான் ,  பங்களாதேஷ் ,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது ,  அதே நேரத்தில்  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு அவர்களை முகாம்களில் தடுத்து வைக்கவும் பின்னர் குடியுரிமையை அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில் அவர்களை நாடு கடத்தவும்  மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது இஸ்லாமியர்களை தனிமைபடுத்தும் முயற்ச்சி என நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் .  அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர்  பொதுமக்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தொடர் போராட்டத்தால்  இந்தியாவில் ஒரு அசாதாரண சூழல் நிலவிவருகிறது . இந்நிலையில்   இச்சட்டம் குறித்து விளக்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இச்சட்டத்தால் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்திருந்தார்.  அதேபோல் டெல்லி ராம்லீலா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இச்சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் இச்சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை ஒன்றும் செய்யாது அதற்கு நான் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளையில் தேசிய குடியுரிமை பதிவேடு பணிக்காக மத்திய அரசு 8,500 கோடி ஒதுக்கியுள்ளதுடன் சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவியவர்களை கண்டறிந்து அவர்களைத் தடுத்து வைக்க ஆங்காங்கே  தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது என கூறி அதற்கான ஆதாரங்களையும் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார் . இந்நிலையில்  போராட்டங்கள் அதி தீவிரமாக நடந்து வருகின்றன .  கேரளா,  மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பகிரங்கமாக தெரிவித்துள்ளன .  இந்நிலையில் மத்திய அரசை எச்சரித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  இச்சட்டத்தை கொண்டுவருவது  நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என எச்சரித்துள்ளார் .  

இந்நிலையில் மேற்குவங்கத்தில் மக்கள் மத்தியில் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 30,000 தன்னார்வலர்கள் பாஜக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன,  தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று புதிய குடியுரிமை சட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பதுடன் சட்டம் குறித்து  மக்கள் எழும்  சந்தேகத்தை தீர்த்துவைப்பர்.   இந்த நடவடிக்கை ஜனவரி மாதம் கடைசி வாரத்தில்  தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  கட்சியின் செயற்பாட்டு தலைவர் ஜேபி நாடாவுடன் ஆலோசித்த பின்னர் இது இறுதி செய்யப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .  மக்கள் மத்தியில் சட்டம் குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே  இந்த முயற்சி என பாஜக தெரிவித்துள்ளது .