சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் சிறு, குறு விசைத்தறியாளர்கள் 31.3.2017-க்கு முன்பு பெற்ற மூலதனக் கடன் தொகை ரூ.65 கோடி தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதே போன்று கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வீடு கட்ட பெற்ற கடன் தொகை, வட்டி, அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


தற்போது சட்டமன்றத்தில் 88 தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் என்னை சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக எந்த கோரிக்கையும் வைத்தது இல்லை. அவ்வாறு இருக்கையில் அந்த தொகுதிக்கு அவர்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தி.மு.க. பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி அதன் மூலம் வாக்குகளை பெற நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். தற்போது புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து, மக்கள் செல்வாக்கு இருப்பது போல காட்டி கொண்டிருக்கிறார். எந்த சின்னத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ, அந்த சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல்வேறு வகையில் அவர் சதி செய்தார்.

18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அ.தி.மு.க.வில் இருந்து பிரித்து, அவர்களை தகுதிநீக்கம் செய்ய காரணமாக இருந்தவர் டி.டி.வி.தினகரன். கட்சிக்கு துரோகம் செய்த டி.டி.வி.தினகரன் இந்த தேர்தலோடு விரட்டியடிக்கப்பட வேண்டும் என கடுமையாக பேசினார்.