தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, 3 மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதே பெரும் தண்டனை தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா ஆபத்து உச்சத்தில் இருக்கும் சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது மட்டுமின்றி கொடுமையானதும் கூட. தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, 3 மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதே பெரும் தண்டனை தான். 

ஒரு மையத்தில்  குறைந்தது 100 மாணவர் தேர்வு எழுதுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றைப் பொதுக் கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே  கொரோனா பரவுவதற்கு போதுமானது. ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’’என்ற வள்ளுவரின் குறளை எழுத வைத்து அதற்கு மதிப்பெண் வழங்கும் தேர்வுத்துறை, அந்த திருக்குறளுக்கான பொருளை புரிந்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிர்களுடன் விளையாடக் கூடாது.

 

தேர்வுத்துறையில் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கு பொறுப்பாளரான இணை இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய ஓர் உதவியாளர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் என்றெல்லாம்  இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது? அது எவ்வளவு வேகமாக பரவும் என்பது குறித்தெல்லாம் மற்றவர்களை விட தேர்வுத்துறையினருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தும் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டக்கூடாது’’என அவர் தெரிவித்துள்ளார்.