மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறினர். அடுத்து வந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த தினகரன் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைதேர்லையும் புறக்கணிப்பதாக அறிவித்தார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் ஈடுபட்டிருப்பதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தேனியில் நடைபெற்ற அமமுக கூட்டத்தில் பங்கு பெற்று தினகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமமுக மறைந்து போய்விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என்றார். நிரந்தர சின்னம் இல்லாத காரணத்தாலேயே இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நிலையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தலை தைரியமாக எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் விரைவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று கூறிய அவர், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்பதற்காக பாடுபடுவோம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.