இந்த ஆட்சியில் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு தற்போது தமிழக அரசுக்கு இருக்கும் கடனே உதாரணம் என துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவில்லை. அப்போது இடைக்கால பட்ஜெட்டை துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து சில கருத்துக்களை பேச முயற்சித்தார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. துணை முதலமைச்சரை பட்ஜெட் வாசிக்க அனுமதி அளித்துவிட்டேன். எனவே இப்போது உங்களை பேச அனுமதிக்க இயலாது என்று துரைமுருகனை பார்த்து சபாநாயகர் கூறினார். ஆனாலும் துரைமுருகன் அதிமுக அரசை பற்றி சில கருத்துக்களை பேச தொடங்கினார். ஆனால், அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த சமயத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தொடரை தொடர்ந்து வாசித்தார். இதனால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

இதனையடுத்து, துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இடைக்கால நிதிநிலை அறிக்கையை திமுக புறக்கணிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நிதிநிலை அறிக்கை பற்றி சபையில் தெரிவிக்கும் போது திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஆட்சியில் ரூ.5.70 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த ஆட்சியில் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு தற்போது தமிழக அரசுக்கு இருக்கும் கடனே உதாரணம்.

இந்த கடன் நெருக்கடியில் அதிமுக ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக மக்கள் வேதனைப்படும் அளவுக்கு கடன் இருப்பது வெட்கக் கேடானது. இந்த அரசு தேவையானவற்றுக்கு செலவு செய்யாமல் தேவை இல்லாமல் கண்மூடித்தனமாக செலவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்து துறைகளும் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. நிதி மேலாண்மைக்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை மேலாண்மை சரிசெய்யப்படும். தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை கொடுப்போம். தமிழக அரசு ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தமிழக தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று கூறினார்.