ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தர்காவை சுத்தம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மேற்கு பகுதியில் ஆலா ஹசரத் தர்கா அமைந்துள்ளது. கொரோனா பரவலால் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வழிபாட்டுத் தலங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரேலி தர்காவில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி தெளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலா ஹசரத் தர்காவின் தலைமை இமாம் முப்தி நஷ் தர் பரூக்கீ கூறுகையில், "போதை தரும் ஆல்கஹாலை பயன்படுத்த இஸ்லாத்தில் தடை உள்ளது. எனவே ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்ட கிருமிநாசினிகளை முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது. இதை நன்கு அறிந்த பின் மசூதி, தர்காக்களில் பயன்படுத்துவது இஸ்லாத்தில் குற்றமாகும். எனவே, ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்து மாறு கோரியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோல, வழிபாட்டுத்தலங்களில் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்த அனுமதி மறுப்பது முதன்முறையல்ல. இதற்கு முன்பு, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலின் மா வைஷ் ணோவதம் நவ் துர்கா கோயிலின் தலைமை பண்டிதரான சந்திரசேகர் திவாரி கிருமிநாசினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.