Asianet News TamilAsianet News Tamil

இவ்வளவு பேசுறீங்களே... நீங்கள் ஒருவருக்காவது கொடுத்தீர்களா? சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய ஸ்டாலின்..!

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள்; தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீர்கள்; கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீர்களே? யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா? 

We will not back down from our promises... MK Stalin speech
Author
Chennai, First Published Aug 16, 2021, 1:28 PM IST

உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை நாட்டு மக்களும் மறக்கவில்லை என அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இதுதொடர்பான  விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். 

We will not back down from our promises... MK Stalin speech

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்;- முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான  உதயகுமார் இங்கே பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றிற்குரிய விளக்கங்களை நம்முடைய அமைச்சர் பெருமக்கள் இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. ஒரே வரியிலே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில், தி.மு.க. வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலே, பின்வாங்குவதற்கான முயற்சி என்ற பொருள்பட அவர் ஒரு கருத்தை எடுத்துப் பேசினார். நேற்றைக்கு முன்தினம் 100-வது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்குப் பாராட்டுத் தெரிவித்து பலர் இந்த அவையிலே பேசியபோது, நான் ஏற்புரை ஆற்றிப் பேசுகிறபோதுகூட சொன்னேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், நாங்கள் அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். 

We will not back down from our promises... MK Stalin speech

நீங்கள் கேட்கலாம் - விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்வோம்; நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே! அதற்கெல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே! என்ற அந்த அடிப்படையிலே உறுப்பினர் உதயகுமார் இங்கே பேசியிருக்கலாம். உறுதியாகச் சொல்கிறேன். வெள்ளை அறிக்கையிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையிலேகூட, நிதியமைச்சர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அந்த நகைக்கடன் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருதினாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. விவசாயிகளுடைய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாக அது வழங்கப்படும் என்ற உறுதிமொழியைச் சொல்லியிருக்கிறோம். 

உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை நாட்டு மக்களும் மறக்கவில்லை. அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள் பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

We will not back down from our promises... MK Stalin speech

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள்; தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீர்கள்; கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீர்களே? யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா? குறைந்த விலையிலே, அவசியமான மளிகைப் பொருட்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அது கொடுக்கப்பட்டதா?  அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்று உறுதி கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அதைக் கொடுத்தீர்களா? பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என்றீர்கள், அதை அமைத்திருக்கிறீர்களா?அனைத்துப் பழங்களுக்குமான சிறப்பு அங்காடிகளை உருவாக்குவோம் கட்டித் தருவோம் என்று சொன்னீர்கள். எங்கேயாவது கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா?

அனைத்துப் பொது இடங்களிலும் wi-fi வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னீர்கள், அப்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிற இடத்தை எங்கேயாவது காட்டுங்கள்.  டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னீர்கள். அதை அமைத்தீர்களா? இப்படி பெரிய பட்டியலே இருக்கின்றது. விவசாயிகளுடைய பயிர்க் கடனைப் பொறுத்தவரையில், அதேபோன்று நகைக்கடனைப் பொறுத்தவரையில், எங்கெங்கு முறைகேடு நடந்திருக்கிறது, எங்கெங்கு தவறுகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் தன்னுடைய துறை மானியக் கோரிக்கை விவாத்திற்கு பதிலளித்துப் பேசுகிறபோது, நிச்சயமாக அவை குறித்து ஆதாரப்பூர்வமாக உங்களிடத்திலே எடுத்துச் சொல்வார் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

We will not back down from our promises... MK Stalin speech

உங்கள் ஆட்சியில் இதைச் செய்யவில்லையே, செய்யவில்லையே என்று நான் கேட்டதற்கு அதேபோன்று நாங்களும் செய்யாமல் இருப்பதற்ககாக இதைச் சொல்கிறோம் என்று யாரும் கருத வேண்டாம்.  நிச்சயமாக, உறுதியாக அதிலேயிருக்கக்கூடிய முறைகேடுகளை எல்லாம் களைந்து, இருக்கக்கூடிய நிதிப் பற்றாக்குறையையும் சரிசெய்து, உறுதியாக தேர்தல் நேரத்தில் வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய இலட்சியம் - அதுதான் எங்களுடைய பணி. எனவே, யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios