அரசாங்கத்தில் பங்கு இல்லை என்றால் தேர்தல்  முடிந்தவுடன் நாம் அந்த  கூட்டணியிலிருந்து வெளியேறி விட வேண்டும்,  இந்த நிலையை நாம் எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால் தான் கட்சியை நாம் பலப்படுத்த முடியும் என்று நான் வலியுறுத்தியுள்ளேன். அதேநேரத்தில் இதற்கு கட்சியினுடைய தொண்டர்களும் ஒத்துழைக்கவேண்டும், கட்சியினுடைய தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். 

கூட்டணியால் தான் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து விட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு இருந்தால் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும் என்றும், அப்படி அரசாங்கத்தில் பங்கு இல்லை என்றால் தேர்தல் முடிந்தவுடன் வெளியேறிவிட வேண்டும் என்று, தான் பல வருடங்களாக கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி.. சுதந்திர இந்தியாவில் பல ஆண்டுகள் எதிரிகளே இல்லாமல் ஆட்சி செய்த கட்சி.. இன்றும் காங்கிரஸ் கட்சியினர் இப்படித்தான் தங்கள் கட்சியை கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். " எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்" என்று சொல்வது போல அப்படி ஒரு உச்சத்திலிருந்த காட்சி, இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறியுள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவில் 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியான் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மெல்ல மெல்ல தேய்ந்து 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் கட்சியாக மாறியுள்ளது. 1980ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 380 எம்எல்ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியால் 2017ஆம் ஆண்டு வெறும் 7 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது.

ஒடிசாவிலும், குஜராத்திலும் 24 ஆண்டுகள் பின்னரும் இழந்த ஆட்சியை காங்கிரஸால் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுவதும் 49.2 சதவீதமான இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மூன்று முறை ஆட்சி வகித்த காங்கிரசுக்கு இப்போது வெறும் 5% வாக்குகளே உள்ளன என்பது தனி சோகம். குறிப்பாக பட்டியலின மக்கள் ஆதரவு சிறுபான்மையின மக்கள் ஆதரவு என்ற விஷயங்களை காங்கிரஸ் கையில் எடுத்து அரசியல் செய்து வந்த நிலையில், தற்போது மாநில கட்சிகளும் இத்தகைய விஷயத்தை பின்பற்றுவதால் காங்கிரசுக்கு அது பெரும் சவாலாக மாறியுள்ளது. இயல்பாகவே தேசிய கட்சியின் மீது ஈர்ப்பு குறைந்து பிராந்திய கட்சிகளை நம்பும் நிலைக்கு மக்கள் வந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்புறத்தில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் வலிமை பெற்றுள்ளது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் கூட அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. பெரிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டவும், அல்லது பாஜகவை வலிமையாக எதிர்க்கவும் காங்கிரசிடம் எந்த திட்டம் இல்லை என்ற விமர்சனமும் அக்கட்சி மீது இருந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. யுபிஏ 1, 2 காலங்களில் காங்கிரசுடன் அரசியல் ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் ஒட்டி உறவாடிய திமுக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சித்து காங்கிரஸை ஒதுக்கித் தள்ளியது. காங்கிரஸ் மீதான ஊழல் எதிர்ப்பு அலை மற்றும் ஈழ உணர்வாளர்கள் கோபம், திமுக காங்கிரஸை ஒதுக்கும் சூழலை உருவாகியது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் தேவையை உணர்ந்து திமுக அதை கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. 

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து அதிக இடங்களை வாங்கிய காங்கிரஸ் இப்போது கொடுக்கும் இடங்களை கொடுங்கள், வாங்கிக் கொள்கிறோம் என திமுகவிடம் பொட்டிப் பாம்பாய் அடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய அளவில் காங்கிரசை ஓரம்கட்டிவிட்டு பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் 3-வது அணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன. காங்கிரசை வெளிப்படையாகவே மம்தா பானர்ஜி விமர்சித்து வருகிறார். அதேபோல் காங்கிரஸ்காரர்களும் மம்தா பானர்ஜிதான் பாஜகவின் ஆக்சிஜன் சப்ளையர் என்றும், மம்தா தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக, காங்கிரசை எதிர்த்து பாஜகவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கி தரும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என சிவசேனா கட்சியும் எச்சரித்துள்ளது.

அதேபோல எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆதரவு அளிக்கக்கூடாது என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இப்படி தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடிகளையும், தள்ளாட்டத்தையும் சந்தித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி, காங்கிரசின் வீழ்ச்சிக்கான காரணம் குறித்தும் அதை மீட்டெடுப்பதற்கான வழி குறித்தும் கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:- பாஜகவுக்கு எதிராக காங்கிரசைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் எல்லா மாநில கட்சிகளும் உறுதியாக உள்ளன. இடதுசாரிகள் அதில் உறுதியாக இருக்கிறார்கள், சிவசேனா அதில் தெளிவாக இருக்கிறது, திமுகவும் அப்படியே உறுதி செய்திருக்கிறது. இதில் மம்தா பானர்ஜியை நம்பி எந்த ஒரு அரசியல் கட்சியும் போகாது. மொத்தத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது.

அதற்கான ஆதரவுகளும் வலிமையாக இருக்கிறது. மொத்தத்தில் கூட்டணி இல்லாமல் எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தியாவில் இருக்க முடியாது. இந்த கூட்டணி தத்துவம் ஒரு கட்சி தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காகத்தான் வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் செய்த தவறு என்னவென்றால், கூட்டணியால் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்பட்டு போய்விட்டது. ஏனென்றால் கூட்டணி என்பது சரியாக அமையவில்லை, இந்த மாநிலத்தில் தமிழகத்தில் அதனுடைய தன்மை காங்கிரசை பலவீனப்படுத்திவிட்டது. நான் பல ஆண்டுகளாக என்னுடைய கட்சி தோழர்களிடமும், என்னுடைய கட்சித் தலைமையிடமும் பேசுகிற போதெல்லாம், அரசாங்கத்தில் நமக்கு பங்கு இருக்கும் என்றால் நாம் ஐந்து ஆண்டு காலம் அந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கலாம்.

அரசாங்கத்தில் பங்கு இல்லை என்றால் தேர்தல் முடிந்தவுடன் நாம் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி விட வேண்டும், இந்த நிலையை நாம் எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால் தான் கட்சியை நாம் பலப்படுத்த முடியும் என்று நான் வலியுறுத்தியுள்ளேன். அதேநேரத்தில் இதற்கு கட்சியினுடைய தொண்டர்களும் ஒத்துழைக்கவேண்டும், கட்சியினுடைய தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் அதற்கான முயற்சியை இதுவரை யாரும் எடுக்கவில்லை, ஆனால் மூப்பனார் அவர்கள் இதற்கான முயற்சியை இரண்டு முறை எடுத்திருக்கிறார். அது நல்ல பலனை கொடுத்த்து. அதன் பிறகு யாரும் அதை முன்னெடுக்க வில்லை. ஒன்றை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். காங்கிரசால் தமிழகத்தில் வெற்றி பெற்று ஒரு வலிமையான அரசாங்கத்தை நிறுவ முடியும். தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பெரும் முயற்சியின் அடிப்படையில் தேசிய இயக்கமான காங்கிரஸ் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அது விரைவில் நடக்கும். என தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் அழகிரு இருந்து வரும் நிலையில் கூட்டணியால் தான் காங்கிரஸ் கரைந்துவிட்டது என பேசியிருப்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.