We ready to sterlite factory coming days protest ladies told

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 55 நாட்களுக்கு மேலாக போராடியும் இது வரை தமிழக அரசு ஏன் என்று கூட கேட்கவில்லை என குற்றம்சாட்டிய குமரெட்டிபுரம் பெண்கள் இது வரை நடத்தி வந்த அறவழிப்போராட்டம் உதவாது என்றும் நாங்களே முன்னின்று ஸ்டெர்லைட் ஆலையை என்ன பிரச்சனை வந்தாலும் மூடியே தீருவோம் என சபதம் எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

அவர்களது போராட்டத் திற்கு தினமும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிர மடைந்தது.

அ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மற்ற கிராமங்களான பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். 

மேலும் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மொத்தம் 8 இடங்களில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 57 வது நாளாக போராட்டம் தொடருகிறது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மகளிர் கல்லூரிகளின், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்கள்.

அவர்கள் தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு பேரணியாக சென்று, அங்கு இன்று 57-வது நாளாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் கடந்த 57 நாட்களாக அறவழியில் போராடியும் இது வரை தமிழக அரசோ, மத்திய அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய பெண்கள், இது வரை தாங்கள் நடத்திய அறவழிப் போராட்டதால் எந்த பயனுமில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தாங்களே ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று அதை மூடப் போவதாக பெண்கள் படை தெரிவித்துள்ளனர்.