கடல் அரிப்பால் வீடுகளை இழந்தும், கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட முயன்றதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீடு சென்னை பட்டினப்பாக்கம் சவுத்கேஷ்டில் உள்ளது. இன்று காலை, அவரது வீட்டுக்கு அருகே வந்த பெண்
ஒருவர் தான் வைத்திருந்த பையில் இருந்து நண்டுகளை எடுத்து அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் விட முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அந்த பெண்ணை உடனடியாக தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர நர்மதா என்பது தெரிய வந்தது. நர்மதாவை கைது செய்த போலீசார், பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கும் அழைத்து சென்றனர்.

நர்மதாவிடம் நடத்திய விசாரணையில், கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ளோம் என்றும், இதனைக் கண்டு கொள்ளாத அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட முயன்றதாக கூறினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, புலி, சிங்கம் என அனைத்தையும் சந்தித்து வந்த தாம், நண்டுக்கு பயப்பட
போவதில்லை என்று கூறினார். ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக தன் வீட்டில் அப்பெண் போராட்டம் நடத்தியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மேலும் பாதிக்கப்ட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.