வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் முறையாக இல்லை எனவும், அதிமுக-பாமக படுதோல்வி என்பது உறுதி என்பதால் விரக்தியில் திட்டமிட்டு இரட்டை கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் இது குறித்து முறையாக விசாரிக்கப்படும்  எனவும் அவர் கூறினார். 

அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விசிகவினர் மற்றும் மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இருவரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அரக்கோணத்தில் நடந்திருப்பது திடீரென நடைபெற்ற படுகொலை அல்ல. இது நீண்ட நாட்களாக திட்டமிட்ட நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையவுள்ளது. அந்த விரக்த்தியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து தாக்குதல் நடந்த போதும் இந்த சம்பவங்கள் கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக விசிகவினர் அமைதி காத்தனர்.மதுபோதையின் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறுவது தவறு. அதிமுக, பாமக கும்பலாலும், மணல் திருடும் கும்பலாலும் திட்டமிட்டு இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தில் உள்ள அரசு அமைப்புகள் தலித் விரோத போக்கை கொண்டுள்ளன. இருக்கிற சட்டங்களை முறையாக செயல்படுத்தினாலே இது போன்ற சம்பவங்களை தடுக்கலாம். குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்கு கிடைத்தால் போதும் அதை வைத்து பேரம் பேசினால் போதும் என்று பாமக நினைக்கிறது. ஜாதிய வன்மத்தை மையமாக கொண்டு பாமக செயல்படுகிறது. காவல்துறையின் போக்கு கண்டிக்கதக்க உள்ளது. பாதிக்கபட்டவர்களின் அனுமதி இல்லாமல் உதற்கூராய்வு செய்ததை விசிக கண்டிக்கிறது.புதிய அரசு அமைந்தவுடன் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் தேவையானது என்று கூறினார்.