ஒரு புகழ் பெற்ற தலைவரை நாம் இழந்து விட்டோம் எனவும்,  இளமைப் பருவம் தொட்டே காங்கிரஸ் சித்தாந்தத்தில் நின்று கடுமையாக உழைத்தவர் வசந்தகுமார் என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். வசந்த குமார் மறைவுக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்படுவதும், அடுத்தடுத்து உயிரிழப்பதும், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதேபோல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை, இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த  கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் வெள்ளிக்கிழமை மாலை 6.56 மணி அளவில் உயிரிழந்தார். 

அவருக்கு வயது (70) அவரது மறைவு அரசியல் களத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வசந்தகுமாரின் மறைவிற்கு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ்  கட்சித் தலைவர் ராகுல் காந்தி வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- திரு. எச். வசந்தகுமார் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியால் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். ஒரு புகழ் பெற்ற தலைவரை நாம் இழந்து விட்டோம். தனது இளமைப் பருவம் தொட்டே காங்கிரஸ் சித்தாந்தத்தில் நின்று கடுமையாக உழைத்தவர் வசந்தகுமார் என்பதை நினைவு படுத்துகிறேன். 

அவர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் சிறந்து விளங்கியவர் அல்ல, தொழில் முனைவோர் மட்டுமன்றி, அவர் சிறந்த அரசியல் தலைவர், பொதுச் சேவையில் அதீதநாட்டம் கொண்டவர், அற்பணிப்பு உள்ளம் கொண்டவர் என அவரைக் குறித்து விவரித்துக் கொண்டே போகலாம். பாராளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக தனது கருத்துக்களை எடுத்து வைக்க கூடியவர், மிகச்சிறந்த மனிதரை, உணவுமிக்க அரசியல் தலைவரை தமிழகமும், காங்கிரசும் இழந்து விட்டது. அவர் மறைந்தாலும் அவரது கொள்கை என்றும் வாழும். என ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்