தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக அரசை மத்திய அரசுதான் இயக்கி வருகிறது என கூறப்படுகிறது. ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் இருவரும் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்து வருகின்றனர், இதில் தமிழக நலன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

நீட் தேர்வு, உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின்திட்டம் போன்ற ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த திட்டங்கள் அனைத்துக்கும் எடப்பாடி அரசு பச்சைக் கொடி காட்டியது. இதே போன்று மீத்தேன் திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எழுந்த பிரச்சனை போன்ற தமிழக நலன்களில் உரிமையை மத்திய அரசிடம் இபிஎஸ் அரசு விட்டுக் கொடுத்தாகவும் புகார் எழுந்தது.

பெரும்பாலும் அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழக நலன்களை மத்திய அரசிடம் தமிழக அரசு அடகு வைத்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதே போன்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை  தரக்குறைவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இதே போன்று தமிழக மக்கள் தாறுமாறாக எதிர்க்கும் 8 வழிச்சாலைத் திட்டத்தையும் எடப்பாடி அரசு செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கேளாவை போன்று தமிழகத்தில் மழை பெய்தால் அதை சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும்,   ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்..

அதிக மழை, வெள்ளம் மற்றும்  இயற்கை சீற்றத்தை தடுக்க முடியாது. இதைத் தடுக்கும் விதமாக ஏரிகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.. 

தமிழக மக்கள் வரவேற்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, . மத்திய அரசு  சொல்லும்,  எல்லாத்துக்குமே தமிழக அரசு தலையாட்டாது என்றும்,  எதை எதிர்க்க வேண்டுமோ அதை தங்களது  அரசு எதிர்க்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.