அதிமுக குடுமிபிடி எங்களிடம் இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் நேற்றே அனைவரும் இணைந்திருப்பார்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு பின்னணியில் பாஜக செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்புக்கு பாஜக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், இந்த குற்றச்சாட்டை பாஜக தலைவர்கள் மறுத்து வருகின்றனர். அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் அதில் தலையிட முடியாது என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, இன்று சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்க, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் பலர் அவரை வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக குடுமிபிடி எங்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் நேற்றே அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று கூறினார்.

கழகம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.