நாட்டில் உள்ள மற்ற எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திகழ்வதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு உயர் அதிகாரியே இப்படி முதலமைச்சரை பொது நிகழ்ச்சியில் பாராட்டு இருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. மதுரையில் மாவட்ட தொழில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மாபெரும் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் டி.ஜி  வினய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,கொரோனா கால கட்டத்தில் உலகமே அவசர நிலையில் இருந்தது. ஆனால் தமிழக முதலமைச்சர் அதையெல்லாம் சமாளித்து பொருளாதார நடவடிக்கையில் தமிழகத்தை முன்னேற்றியுள்ளார். எங்களைப் போன்ற அதிகாரிகளுக்கு காணொளி காட்சி மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

அவர் கொடுத்த ஆலோசனைகளின்படி நாங்கள் செயல்பட்டோம், அப்படி செயல்பட்டதன் விளைவாக இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று என்பது குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். தொழில் தொடங்க நிலம் கட்டமைப்பு வசதி முக்கியமாகும், தொழில் தொடங்க சிங்கிள் விண்டோஸ் சிஸ்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டினர் ஆர்வம் காட்டியுள்ளனர்.  இந்த காலகட்டத்திலும்  தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் இருந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். 

அதேபோல் மதுரை மாநகராட்சி ஆணையர் பேசியதாவது:  தமிழகத்தில் தொழில் தொடங்க உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. சென்னையில் மட்டும் மூன்று துறைமுகங்கள் உள்ளன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2015 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி 2.42 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்தார். அதில் 72 திட்டங்கள்  செயல் படுத்தப்பட்டுள்ளன. இதேபோல முதலமைச்சர் அவர்கள் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதன்மூலம் 59 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆட்டோமொபைல் வணிகத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புகழ் பெற்ற நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.