நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில், அதன் விலைவாசி உயர்வை சமாளிப்பது குறித்து பாஜக அமைச்சர் ஒருவர் கொடுத்துள்ள வித்தியாசமான யோசனையை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 88 ரூபாய்க்கும், டீசல் 77 ரூபாய்க்கும் அதிகரித்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில தேவஸ்தானத்துறை அமைச்சர் ராஜ்குமார் ரின்வா விடம் பெட்ரோல் விலை உயர்வை சமாளிப்பது குறித்து மக்களுக்கு யோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, குறைப்பு மத்திய அரசின் கையில் இல்லை, அது சர்வதேச சந்தையோடு தொடர்புடையது என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால், அதை சமாளிக்க மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், மக்கள் தங்கள் செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது மற்ற தேவைகளுக்கு செலவிடும் தொகையைக் குறைத்துக் கொண்டு பெட்ரோல், டீசலுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். இது மக்களுக்குப் புரியவில்லை. பெட்ரோல், டீசல் அதிகமாக வாங்குவதன் காரணமாகவே விலை உயர்கிறது. இது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ராஜஸ்தான் அரசு வரியைக் குறைத்துள்ளது எனத் தெரிவித்தார்.அமைச்சர் ரின்வாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், பாஜக அமைச்சரின் இந்தக் கருத்து அகங்காரத்தின் உச்சம் என்று தெரிவித்தார்.