அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் கிங் மேக்கர்களாக இருந்து மத்திய அரசை தீர்மானிக்கும் என ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பாஜகவினருக்கு சவால் விடுத்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று இன்று 5 ஆவது ஆண்டு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளாக இருந்த பாஜகவும், தெலுங்கு தேசம் கட்சியும் தற்போது பரம எதிரிகளாக மாறி விட்டனர்.

அது மட்டுமல்லாமல் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், சந்திர பாபு நாயுடு உள்ளிடோர் முயற்சி செய்து வருகின்றனர்.2019-ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜகவுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க மாநில கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதற்கு அடித்தளம் அமைக்கும் வண்ணம் கர்நாடக முதலமைச்சராக  பதவியேற்ற குமாரசாமி தனது பதவியேற்பு விழாவுக்கு பல மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று பாஜவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் பலத்தை நிரூபிக்க பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இது சிறப்பான நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் ‘கிங் மேக்கர்’களாக இருந்து மத்திய அரசை தீர்மானிக்கும் என்று ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை  வீழ்த்தும். நாட்டில் பொருளாதாரத்திற்கு நன்மை செய்யும் என நினைத்து பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தேன், ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என குற்றம்சாட்டினார்.

ஆந்திராவில் பாஜக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளை உருவாக்க முயல்கிறது. மேலும் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

இனி மாநிலக்கட்சிகள் இணைந்து யாலை கை காட்டுகின்றனவோ அவர்கள்தான் நாட்டின் பிரதமராக வர முடியும் என்றும் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.