we are not ready to join with dinakaran if he starts a party said thanga thamizh
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதில் சேரமாட்டோம் என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வம் அணியும் சசிகலாவுடன் இருந்த பழனிசாமி அணியும் இணைந்துகொண்டு சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு ஒதுக்கினர்.
இரட்டை இலையையும் மீட்டெடுத்து அரசியலில் சசிகலாவையும் தினகரனையும் தனிமைப்படுத்தினர். ஆனாலும் தினகரனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளும் இருந்தனர். தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தினகரன் ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
இரட்டை இலையையும் இழந்த நிலையில், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக களம் கண்ட தினகரன் அபார வெற்றி பெற்றார். எல்லா இக்கட்டான சூழல்களிலும் தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் பக்கபலமாகவும் தினகரனின் தளபதிகளாகவும் திகழ்ந்தனர்.
எனவே தனது முடிவுக்கு உடன்படுவர் என்ற நம்பிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு தனிக்கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் பிறந்தநாளில் அறிவிப்பதாக தினகரன் தெரிவித்தார். பின்னர், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அதிமுகவையும் இரட்டை இலையையும் மக்கள் மன்றத்தின் மூலமும் நீதிமன்றத்தின் மூலமும் மீட்டெடுக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து விட்டார்.
தினகரனின் தனிக்கட்சி திட்டம் அவரது ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அந்த முயற்சியில் இருந்து தினகரன் பின்வாங்கினார். தினகரனின் தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பு அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தினகரனின் தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பை அவரது ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை என்பதை தங்க தமிழ்ச்செல்வனின் கருத்து வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று அதிமுகவில் தான் இருக்கிறோம். நாங்கள் அதிமுக உறுப்பினர்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டோம். தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தாலும் நாங்கள் சசிகலா தலைமையிலான அதிமுகவில் தொடர்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதிலிருந்து சசிகலாவுக்காகத்தான் தினகரனே தவிர தினகரன் தான் எங்களுக்கும் அனைத்தும் என்று அர்த்தமல்ல என்பதை மறைமுகமாக தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டி உணர்த்தியுள்ளது.
