சசிகலாவால் நாங்கள்  யாரும் அமைச்சராகவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் நாங்கள் அமைச்சர்கள் ஆனோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;-மத்திய வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை முழுவதும் பார்த்தபின் விமர்சிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது. வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் முதலமைச்சரின் அறிக்கையை அதிமுக அரசின் முடிவு எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விவசாய சட்ட மசோதா தொடர்பாக மாநிலங்களவை மற்றும் மக்களவையில் அதிமுக சார்பில் வெளிப்பட்ட இருவேறு கருத்துக்களை பெரிது படுத்த வேண்டாம் என தெரிவித்தார். வேளாண் சட்ட மசோதா தொடர்பாக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியது குறித்து பேசிய அவர், திமுக, விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திமுக ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு, காவிரி உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோனது என குற்றம்சாட்டினார். 

மேலும், பேசிய அமைச்சர் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை. சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் நாங்கள் அமைச்சர்கள் ஆனோம் என்றார்.