we are cheated betrayed in Cauvery issue vaiko
கோயம்புத்தூர்
நடுவர் மன்ற தீர்ப்புக்கு மாறாகவும் அந்த தீர்ப்பில் இருந்த பாதுகாப்புகள் அம்சங்கள் எல்லாம் அகற்றப்பட்டு நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று கோவையில் வைகோ கூறினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "அண்ணாவின் மறைவிற்கு பிறகு தி.மு.க.வை கண்ணை இமை காப்பது போல காத்து வரும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கணீரென்ற குரல் மீண்டும் ஒலிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை அரசிதழில் வெளியிட்டதை முதலமைச்சரும், அமைச்சர்களும் வெற்றி என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம். ஏமாற்றப்பட்டுவிட்டோம்.
நடுவர் மன்ற தீர்ப்புக்கு மாறாகவும் அந்த தீர்ப்பில் என்ன பாதுகாப்புகள் இருந்ததோ, குறிப்பாக அணைகள் பாதுகாப்பு, தண்ணீர் திறப்பதை வாரியம்தான் முடிவு செய்யவேண்டும். அணைகளுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டன.
உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்துள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மாற்றிவிட்டார்கள்.
இதற்கு தீர்வு எதிர்காலத்தில் வேண்டும் என்றால் ஒன்பது நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் மேகதாதுவில் அணைகள் கட்டுவதை எல்லாம் தடுத்து நிறுத்த முடியாது.
விவசாயிகளிடம் நிலத்தை வாங்கும் பெரிய நிறுவனங்கள் எரிவாயு உள்ளிட்ட பல கேடு விளைவிக்கும் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவருகின்றன. நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வரட்டும். அதன்மூலம் தொழில் வளம் பெருகட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசு கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது.
ராஜராஜ சோழனின் சிலை உள்ளிட்ட பல சிலைகளை மீட்டு கொண்டுவந்த காவல் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை நான் பாராட்டுகிறேன். இவர் போன்ற பல நல்ல காவல்துறை அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்தால் நாங்கள் பாராட்டுவோம். எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்" என்று வைகோ தெரிவித்தார்.
