சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானம் வழங்கினர். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானத்தை வழங்கியதாக கூறினார்.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 20 நாட்களில் 76 நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளதாக தகவல் கூறினார். ஒரு நபர் பிளாஸ்மா தானம் வழங்குவதன் மூலம் இரு உயிர்களை காப்பாற்றலாம் என்று தெரிவித்த அமைச்சர், இதுவரை பிளாஸ்மா தானத்தின் மூலம் 2,56,310 நோயாளிகள் குணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனடிப்படையில் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெற்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் 81% சதவிகிதம் பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாகவும், நோய் அதிகம் உள்ள மாவட்டங்களில் படிப்படியாக நோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு சிறந்த முறையில் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

சர்வதேச உடல் உறுப்பு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. அம்பத்தூர், அண்ணாநகர், வலசரவாக்கம், அடையார் உள்ளிட்ட பகுதிகள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.தேனீ கோவை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய  சென்னை பெருநகர  காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சென்னையில் 1920 காவலர்களுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு 1549 குணமடைந்து உள்ளனர் என்றார்.