திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூருக்கு இன்று சென்றார். அப்போது, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், சென்னை நகர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்து திரிகின்றனர்.

இதையொட்டி கொளத்தூர் தொகுதி மக்களுக்கு 10 ஆயிரம் குடங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக வரும் தண்ணீரைவிட தற்போது, குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் வழங்கப்பட்ட தண்ணீர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. சில இடங்களில் வாரத்துக்கு ஒரு நாளும் தண்ணீர் வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக 10 ஆயிரம் பிளாஸ்டிக் குடங்களை வழங்கி இருக்கிறோம். தண்ணீர் முறையாக வழங்க வேண்டும் என அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்து வருகிறோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.